கனடாவிலிருந்து ......[அப்புவும் கடவுளும்]


ஒரு கடிதம்
அன்புள்ள அப்புவுக்கு,        16.10.2013   
நான் நலமுடையேன்.அதேபோல் உங்கள் சுகமும் ஆகுக.
உங்கள் கடிதம் எழுதியபடி  நீங்கள் கோவில் போக ஆரப்பித்தமை அறிந்து மிகுந்த சந்தோசமடைகிறேன்.
அப்பு, அக்கா உயிரோட இருந்த காலத்தில் எப்படி இருந்தவர் நீங்கள்.ஊர்க் கோவில் திருவிழா  என்றால் வேலைக்கு லீவு போட்டு கோடியேற்றம் முதல் இறக்கம் வரையில் ஆலயமே தஞ்சமென தங்கியிருந்து தொண்டாற்றியவர் நீங்கள்.
சற்றும் எதிர்பாராத வேளையில், சின்னஞ்சிறு வயதில் அக்கா அகால மரணமடைந்தது எங்கள் எல்லோரையும் பாதித்திருந்தாலும்  கடவுளை நம்பினார் கைவிடப்படார் என்று வாழ்ந்த உங்களுக்கு கவலையோடு பெரும் ஏமாற்றமாகவேபோய் விட்டது. அன்றிலிருந்து ஆலயத்தினையும், ஆண்டவனையும் 20 வருடகாலமாக அடியோடு வெறுத்தே வந்தீர்கள்.
அப்பு, நான் உங்கள் மகன்தான்.இப்படி எல்லாம் எழுதுகிறேன் என்று குறைநினைக்க வேண்டாம்.என் மனதில் பட்டதை எழுதுகின்றேன்.

அப்பு, நீங்கள் பிறதட்டையோ,காவடியோ எடுக்கதேவை இல்லை.காசு,பொருள் என்று இறைக்கத் தேவையில்லை.இவற்றை எல்லாம் கடவுள் கணக்கில் எடுக்கப்போவதில்லை. ஆண்டவன் ஆசைகளுக்கு அப்பாற்பட்டவன் என்று படித்திருக்கிறேன்.அப்படியான ஆண்டவன் உங்கள் அற்ப,சொற்ப சலுகைகளுக்காக உங்களை நாடி வருவதற்கு அவன் மனிதன் இல்லை. அதேவேளை ஆண்டவனுக்கு கொடுப்பதற்கு மனிதனால் எதனை ப்படைக்க முடிந்தது.இறைவனே அனைத்தையும் படைத்தான் என்கிறோம்.அப்படியாயின் மனிதன் கொடுப்பதாக கூறுவது இறைவனால் படைக்கப்பட்டவையே.இறைவன் படைத்ததை அவனுக்கே மனிதன் கொடுப்பதாகக் கூறுவது கேலிக் கூத்தாகவே தெரிகிறது.மனிதன் தனது பணப்பையை நிரப்புவதற்கு  கையாளும் திட்டமிட்ட நாடகமே அது..

நீங்கள் இதுவரையில் ஆலயம் செல்லாமையால் கடவுளுக்கு என்ன நஷ்டம் என்று எண்ணிப்பாருங்கள்.மனிதர்கள் கோவிலைக் கட்டியது மனிதர்க்களுக்காகவே.ஆன்மீக வழியில் மனிதர்களின் மனங்களை பண்படுத்தவும், தூய்மைப் படுத்தவும் ஆலய வழிபாட்டை மனிதன் ஆரம்பித்தான்.அது இன்று திசை மாறிப் போய்க் கொண்டிருந்தாலும்
எங்கள் நம்பிக்கைகளின் ஊடாகவே  நாம் ஆலய  வழிபாட்டின் மூலம் உடல்,உள நலமுள்ளவர்களாக வாழ முடியும்.
எப்படியோ, உங்கள் பொழுதுகள் சந்தோசமாகவே கழிய வாழ்த்திக்கொண்டு  இத்துடன் முடிக்கிறேன். உங்கள் சுகத்தினையும், தேவைகளையும் தொடர்ந்து எழுதுங்கள். .....வணக்கம்
இப்படிக்கு
உங்கள் மகன்
செ.ம.வேந்தன்

0 comments:

Post a Comment