ஊரிலே நடந்தது!?....கனடாவிலிருந்து ஒரு கடிதம்.

அன்புள்ள அப்புவுக்கு,                                                        16-09-2014

நான் நலம் உடையேன்.அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக.
அப்பு, ஊரிலிருந்து கனடா வந்த களை மாறமுன் நான் எம் பிறந்த தேசத்தில் பட்ட அனுபவங்களை பலரும் அறிந்து கொள்ளும் வகையில் உங்களுடன் பகிர்ந்துகொள்வது பலனுள்ளதாகும் என உணர்கிறேன்.

அப்பு, எம் நாட்டினை நோக்கி பல்வேறு நாட்டினைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும்,அவர்களைப் பார்த்தாவது நம்மவர்கள் திருந்தாதது  ,கொழும்பில் விமானநிலையத்தில் இறங்கியதும் அங்கு எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எடுத்துக்காட்டியது.

என்ன நடந்தது எனில் , விமான நிலையத்திலிருந்து வெளியேறும்போது ஏனைய நாடுகளில் கூறுவது போன்று  நன்றி என்றுதான் கூறினேன். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரியோ முகத்தை சுழித்தவாறு நன்றி சொல்லக் கூடாது என்றார். உலகத்திலேயே இப்படியான  ஒரு பதிலை எம்நாட்டில் தான் கேட்க முடிந்தது.
நாட்டினை  அந்நாடு  பல முன்மாதிரியான திட்டங்ககள் மூலம் நாட்டினை அபிவிருத்தி செய்துகொண்டாலும், ஒரு சிலரே அதன் பயன் கிடைக்கும் வகையில் உழைக்கிறார்கள்.பலரும் சோம்பேறி வாழ்க்கையிலேயே வீழ்ந்து நோய்வாய்ப்பட்டுக் கொண்டுள்ளார்கள்.இங்கு வெள்ளைக்காரன். நேரமில்லா வாழ்க்கையிலும் உடல்நலத்துக்கென  நேரமொதுக்கி நடந்தும்,சைக்கிள் ஓடியும் உடற்பயிற்சி செய்கிறான்.ஊரில் தேவைக்கு நடந்தாலோ சைக்கிள் ஓடினாலோ எதோ புதினமாகப் பார்கிறார்கள்,மதிப்பில்லாத வேலை என்று குறைப்பட்டுக் கொள்கிறார்கள்.இந்த வாழ்க்கைமுறையில் நோயாண்டி தேவதை  இவர்கள் வீட்டில் தங்காமல் வேறெங்கு தங்குவாள் .

அப்பு,சங்கரனும் என்னைப்போலவே வெளிநாட்டிலிருந்து வந்திருந்தான். அங்குவாழும் குணா குடும்பத்திற்கு தாராளமாக உதவிகள் செய்தான்.சந்தோசமாகச் செய்துகொண்டிருந்தான். ஒரு சந்தர்ப்பத்தில் குணா ''என்ன செலவழிக்க பயப்பிடுறியள்"என்று சங்கரை சீண்டி அவன் மனசை நோகடித்துவிட்டான்.அதனோடு சங்கரன் செய்யும்,செய்யவிருந்த உதவிகளை நிறுத்திவிட்டான்.நன்றி சொல்லும் பழக்கம் அங்கு  வழக்கத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு செயலுக்கும் இங்கு நன்றி சொல்லக் கேட்டுப்  பழகிய இந்த நாடுகளில் வாழ்ந்து பழகிய எம்போன்றோருக்கு இச் சம்பவம்  நெஞ்சில் புண்ணாக்கியே கொள்ளும்.நன்றி சொல்லாவிட்டாலும் குற்றம் சுமத்தாமல் இருந்திருக்கலாம்.நன்றி கூறுவது வெறும் மூன்று எழுத்துத் தான்.ஆனால் அதன் சக்தி கடலளவு.அச்சக்தி உதவி செய்பவனை இன்னும் செய்தத்தூண்டும்.இப்படித்தான் சிலர் கதைக்கத் தெரியாமல் கதைத்து இருந்த நல்ல எதிர்காலங்களையும் தொலைத்துக்கொல்வர்.


அப்பு, வேலன் போன்றோர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். ஆனால் உழைத்து உண்ண தெரியவில்லை. வெறிச்சோடி இருக்கும் அவன் வாழும் வளவில் முருங்கைமரம்  நட்டாலே,தண்ணீர் பாய்ச்சும் செலவில்லாமலேயே பயன்பெறமுடியும். இங்கு இயந்திர வாழ்க்கை வாழும் எம்மவர்கூட வருடத்தில் கிடைக்கும் 2மாத கோடைகாலத்தினை பயன்படுத்தி தமது சிறு நிலத்தில் தோட்டங்கள் செய்துதான் இலாபம் இல்லாவிடினும் சந்தோசம் காண்கிறார்கள். ஆனால் வேலனோ சோம்பேறி வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தனக்கு காலம் சரியில்லை என்று கூறி விதிமேல் பழியினைப் போட்டு காலத்தினை விரையமாக்கிக்கொண்டு இருக்கிறான்.

அப்பு, எனது நண்பன் அன்ரன் அவனும் தன்னுடைய ஊருக்கு போய் வந்திருந்தான். அவன் ஊருக்குப் போகும்போது நல்லதொரு திட்டத்தோடு சென்றான்.தன்னுடைய நெற்காணிகளை அங்கு வாழும்  உழுதுண்டு வாழும் தமது மாமா குடும்பத்தினருக்கு இனாமாக எழுதிக்கொடுக்கவென்று நினைத்துக்கொண்டு சென்றான்.ஆனால் அவர்களின் திமிர் உரையாடல்கள் அவன் நெஞ்சை உதைத்திட எதுவும் செய்யாது வந்துவிட்டான்.
அப்பு,இங்கு நான் குறிப்பிட்ட சம்பவங்களை பாருங்கள்.எங்கள் எலும்பில்லாத இந்நாக்கினை கவனமாக வைத்திருக்காவிடில்   நாம் என்ன என்னவெல்லாம்  இழக்கவேண்டி வருகிறது.ஒரு உறவை சம்பாதிப்பதற்கு நாம் நீண்ட காலம் உழைக்கவேண்டி உள்ளது.ஆனால் அதே உறவை ஒடித்துவிட ஒரு சொல் அல்லது ஒரு நொடி போதும் என்பது அனுபவசாலிகள் கூ ற்று. அதேவேளை,இச்சொல் சொல்வதினால் நற்பயன் ஏதும் உண்டா என்று ஒரு வினாடி சிந்திப்போமாயின் எமது நாக்கும் தேவையோடு ஆடும்.

அப்பு,உங்களோடு வந்து ஒருமாதம் நின்றாலும் நான் பெற்ற அனுபவங்கள் பல.உங்கள் தேவைகளையும்,சுகத்தினையும் எழுதுங்கள்.மீண்டும் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு,
அன்பின் மகன் 
செ.ம.வேந்தன்.


0 comments:

Post a Comment