கனடாவில் நடந்தவை .....ஒருகடிதம்அன்புள்ள அப்புவுக்கு                                15-12 -2012
உங்கள் கடிதம் கிடைத்தது. உங்கள் சுகம் அறிந்து மகிழ்ச்சி.
அப்பு, இங்கு எமது சமூக நலன் கருதி பல அமைப்புக்கள் இருக்கின்றன.அவை பல்வேறு நிகழ்வுகளுடாக பணத்தினை சேகரித்து தத்தம் ஊர் களினை   வளர்த்துக்கொண்டு இருக்கின்றன. இதில் தங்கள் நேரத்தினையும்,அன்றாட வேலைச்சுமையையும் பொருட்படுத்தாமல் பணிபுரிவோரினையும் நான் பார்க்கக் கூடியதாக    உள்ளது. அவர்கள் பாராட்டப் படவேண்டியவர்கள்.
ஆனால்,இதேமாதிரியான அமைப்புக்களை உருவாக்கியதாக அரசுக்கும் மக்களுக்கும் வேஷம் காட்டி-அதாவது திட்டம் போட்டு மக்களின் பணத்தைத் திருடுற கூட்டமும் திருடிக்கொண்டு-தங்களை பெரும் மனிதர்களாக  காட்டிக்கொண்டு எமது சமுதாயத்தில் நல்ல வசதியாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த நவீன யுகத்தில் யாரும் தம் சுய ரூபத்தினை மறைத்து வாழ்ந்திடல் முடியாது.இருந்தும் தங்களை இன்னும் பெரிய மனிதராக எண்ணிக்கொண்டு அது செய்வோம், இதுசெய்வோம் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டு மேலும் உலகம் தம்மைப் பழித்திடும் நிலை புரியாது மக்கள் முன் நடமாடி வருகிறார்கள்.இவர்களை  இங்கு வாழும் ஒவ்வொரு மனிதரும் இனங்கண்டு கொண்டுள்ளார்கள் என்பது அவர்கள் அறியாத உண்மை.அவை இருக்க..
அப்பு, நான் எப்பொழுதும் பெண்களை உயர்வாக எழுதுவதாகக் குறைப்பட்டு உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் எழுதியிருந்த சங்கதியும் உண்மைதான்.என்ன செய்வது.காலம் எல்லாம் இப்போது தலைகீழாகப் போய்விட்டது. ஒரு திருமணம் என்பது பல்லாண்டு காலம் வாழ்வதற்காகவே.அதனை மதியார் வாழ்க்கைப் படியினை மிதியார்.இது அவர்களே தமக்கு தோண்டும் குழி..
அப்பு,18 வயதான ஒரு காரணத்திற்காக தாம் எதனையும் செய்யலாம் எனச் சிந்திக்கும் இந்த இளம்பிள்ளைகள் எதிர்காலத்தில் தாம் செய்த இப்பெரும் தவறுகளை எண்ணி நிச்சயம் வருந்துவார்கள். ஏனெனில் இளம் வயதில் இவர்களை விரும்பிய எவரும் இவர்கள் வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையினை இழந்து நடுத்தெருவில் நிற்கும் வேளையில் திருப்பிக் கூடப்பார்க்கமாட்டார்கள்.இதைவிட மேலும் நான் இதனைப் பற்றி தற்போது என்னால் எதுவும் எழுத முடியாது.
அப்பு,கனடாவில் வசிப்பதற்காக போலியாக திருமண பந்தத்தில் இணைந்து கனடா சென்றதும் பிரிந்துவிடும் விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக வந்த சட்டமொன்று உண்மையான திருமணத்தின் பின்னரும் கனடா வரமுடியாமல் இருக்கும் பாதிக்கப்பட்டோருக்கு ஓர் நல்ல செய்தியாக அமைந்துள்ளது.அச் சட்டத்தின்படி வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு நிரந்தரவதிவுரிமை வழங்கப்படும் நாளிலிருந்து இரண்டு வருங்களிற்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய வாசிகளாகவே கனடாவில் வதிய வேண்டும்.இவர்கள் இரண்டு வருடங்களிற்கு இணைந்து வாழவேண்டும் என்ற கட்டுப்பாட்டைத் தவிர மற்றைய சகல உரிமைகளும் ஏனைய நிரந்தரவதிவிடக்காரர்களிற்கு உள்ளது போல இவர்களுக்கும் உண்டு. எந்தவிதத் தடையுமில்லாம் இவர்கள் வேலை செய்வது, கல்வியைத் தொடர்வது, சமூகநலன்களைப் பெறுவது எனச் சகல உரிமைகளும் இவர்களிற்கு உண்டு.இவர்கள் அரசின் எதிர்பார்பிற்கேற்ப இரண்டு வருடங்களிற்கு இணைந்து வாழாவிட்டால் வெளிநாட்டிலிருந்து வந்தவரின் நிரந்தர வதிவுரிமை இரத்து செய்யப்படும் என்பதோடு பொறுப்பேற்றவரே தனது துணைக்காக முழுச் செலவையும் செய்யவேண்டும்.

ஒரு நாட்டில் காணப்படும் சலுகைகள் தவறான வழியில் பயன்படுத்தப் படும்போது நாளடைவில் அச்சலுகைகள் அற்றுப்போய்விடும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
அப்பு,உங்கள் சுகத்தினையும்,தேவைகளையும் தொடர்ந்து எழுதுங்கள்.
வணக்கம்
இப்படிக்கு
அன்புமகன்
செ.ம.வேந்தன் 

0 comments:

Post a Comment