தமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி/Part-12A:


"மற்றவைகளும் முடிவும்"


-[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.]
ஆண்டவன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கைம்மாறு செய்வான் [சரிசமமாகத் திருப்பிக்கொடுபான்] என்ற நம்பிக்கை மக்களை சபதம் செய்ய வைத்து அதை நிறைவேற்ற வைக்கிறது அதாவது ஏதாவது ஒன்றை வேண்டி நேர்த்திக்கடன் செய்கிறார்கள்.உதாரணமாக பிள்ளை பாக்கியம் வேண்டுபவர்கள்,அப்படி ஒரு பாக்கியம் பெற்றால்,இதை தருவோம் அல்லது இது செய்வோம் என வேண்டுகிறார்கள்.பின் அதை ஒரு நேர்த்திக்கடனாக செய்து வழிபடுகிறார்கள். 
 
ஒருவர் புது கார்/வாகனம்/வண்டில் வாங்கினால் முதல் பயணத்தை ஆலயத்திற்கு செலுத்துகிறார்கள்.இவை எல்லாம் ஒரு நம்பிக்கையின் அடிப்படையே.   

"தென்னையிளம் நீருக்குள்ளே தேங்கி நிற்கும் ஓட்டுக்குள்ளே
தேங்காயை போலிருப்பான் ஒருவன்-அவனை
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்"

என்றான் கவியரசு கண்ணதாசன்.அதனால் தானோ என்னவோ தேங்காய் தமிழர்களுடன்  ஒட்டிவிட்டது.மேலும் ஒரு தேங்காய் ஆலயத்தில் உடைக்கும் போது,தேங்காயின் கண்ணுக்கு குறுக்காக உடையாமைல் இரண்டு ஒழுங்கான சரிசமமான பாதிகளாக உடைவதையே விரும்புகிறார்கள்.அழுகிய அல்லது சிதைந்த தேங்காய் ஆனால் அது பக்தருக்கு விபத்து அல்லது எதிர்பாரா இடையூறு நடைபெறுவதற்கான முன்கூட்டிய அறிவிப்பாக நம்புகிறார்கள்.இந்த தேங்காய் உடைத்தல் மிகவும் ஒரு பொதுவான நிகழ்ச்சி.வீட்டிற்கு அத்திவாரம் போடும் போதும் உடைப்பார்கள்.வீடு கட்டி முடிந்து ,குடி புகும் போதும் உடைப்பார்கள்.இப்படியே எல்லா நிகழ்வுகளிலும் உடைப்பார்கள்.   

சிதறிய தேங்காய் !
 [thanks-eluthu.com/kavithai] 

"இருக்கா இல்லையா என்று  
தெரியாத சிலைக்கு பால்  
அபிசேகமும் நெய்வேத்தியமும்
   
உயிரோடு இருக்கும் மனிதபிறவிகளுக்கு  
பிச்சை காசும் வேண்டுதலுக்கு  
உடைக்கும் சிதறிய தேங்காயும்   

என்று புரிந்துகொள்ள போகிறது  
மனித இனம் அன்பே கடவுள் என்று"
[சைவ சித்தாந்தம் கூறியவாறு ]

அது போல ஆலய தேரின் அச்சு உடையுமாயின்,அது அந்த கிராமத்திற்கே துன்பம் நிகழப்போவதாக நம்புகிறார்கள்.முதலாவது அறுவடையை ஆலய சமையல் அறைக்கு காணிக்கையாக கொடுக்கிறார்கள்.கண்ணாடி உடைவதை தீயசகுனமாக நம்புகிறார்கள் இதனால் எளிதில் உடைகிற பொருட்களாகிய கண்ணாடி போன்ற வற்றை கவனமாக கையாளவைக்கிறார்கள்.அந்த காலத்தில் பொதுவாக பெரும்பாலோர் வெறும் காலால்தான் வீட்டிற்குள் உலாவினார்கள் என்பதும் இப்படியான பொருட்கள் காயங்களை ஏற்படுத்தக் கூடியன என்பதும் குறிப்பிடத்தக்கது.இடது கையால் ஏற்பதோ கொடுப்பதோ முன்யோசனையில்லாத செயலாக கருதுகிறார்கள்.இது ஏன் என்றால் இடது கை தான் பொதுவாக துப்பரவு செய்யும் வேலைகளுக்கு பாவிப்பதால்.அந்த காலத்தில் கையுறையோ கழிப்பறை ரோல் போன்றவையோ இல்லை என்பதால் இந்த முன் ஏற்பாடு.ஏதாவது ஒரு சந்தேகம் ஏற்படும் போது ஆலயத்திற்கு போய்,அங்கு கடவுள் காலடியில் இரண்டு சிறு பொதியில் இரண்டு மாறுபட்ட நிறம் உள்ள பூவை வைத்து அர்ச்சனைக்கு பின் ஏதாவது ஒன்றை குறிப்பிலாமல் எதேச்சையாக[தன்னிகழ்வாக] எடுப்பார்கள்.அதை கடவுள் கட்டளையாக ஏற்று அதன் படி நடப்பார்கள்.புது வருடப்பிறப்பு அன்று கை விசேசம் வாங்கும்/கொடுக்கும் பழக்கம் தமிழர்களிடையில் உண்டு. 
பெருவாயின் முள்ளியாரின் ஆசாரக்கோவை என்ன சொல்லுகிறது என்று பாருங்கள் .(கடைச்சங்க காலத்தை சேர்ந்த பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று ஆசாரக்கோவை)
30. உறங்கும் முறை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
"கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வம் தொழுது
வடக்கொடு கோணம் தலைசெய்யார் மீக்கோள்
உடற்கொடுத்துச் சேர்தல் வழி."
படுக்கும்பொழுது கடவுளை வணங்கி, வடதிசையில் தலை வைக்காமல்,மேலே போர்த்துக் கொள்ளப் போர்வையை போர்த்திப் படுத்தல் ஒழுக்கமாகும் என்கிறது.

என்ன தான் நாம் 21வது நூற்றாண்டில் வாழ்ந்தாலும் கணினி யுகமாக இருந்தாலும் மனிதன் மூட நம்பிக்கைகளை விடுவதாக இல்லை. எத்தனை பகுத்தறிவு பகலவன் வந்தாலும் மக்கள் மூட நம்பிக்கைகளை மட்டும் விட மாட்டார்கள் என்பது மட்டும் எனக்கு புரிகிறது.

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது"

இது எல்லோருக்கும் தெரிந்த பழமொழி. வளரும் வயதிலேயே நல்ல விடயங்களை  கற்றுக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் அது எக் காலத்துக்கும் நின்று நிலைக்கும் என்பதே அதன் பொருள். ஆகவே மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மை குறித்த விளக்கங்கள் அல்லது பிரச்சாரம் இடைவிடாது இளம் வயதினருக்கு நடத்தப்பட வேண்டும் என நம்புகிறேன். . 

பகுதி/Part-12 B"முடிவுரை"அடுத்த வாரம்  தொடரும்.

0 comments:

Post a Comment