நோய்க்கு நாடவேண்டியது?


"ஏன்?, எப்படி?, எதற்கு?" என்று சிந்தித்ததால் தான் சிலை வடிக்கும் சிற்பியான நான் சிந்தனைச் சிற்பியாக மாறினேன்" என்றார் கிரேக்க அறிஞர் சாக்ரடிஸ். இப்படியிருக்க, பாமர மக்கள் மட்டுமின்றி படித்தவர்களும் கூட சிந்திக்காமல் மூட நம்பிக்கைகளில் இன்னும் மூழ்கிக் கிடப்பது வருத்தத்துக்குரியது
"நோய்க்கும் பார் பேய்க்கும் பார்" என்று தமிழ்நாட்டில் சொல்லப்படும் பழமொழியினால் படித்தவர்கள் கூட தங்கள் குழந்தைகளுக்கு நோய் வந்தால் கோவில் பூசாரிகளிடம் போய் கயிறு கட்டுதல், மந்திரித்துக் கொள்தல் என்கிற தவறான பாதைக்குப் போய் நோய் முற்றிய நிலையில் மருத்துவரிடம் செல்கின்றனர். உதாரணமாக,

1. சிறு குழந்தைகளுக்கு கோடைக் காலத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் அல்லது வெயிலில் அதிக நேரம் விளையாடி விட்டு வந்து உடனே குளிர்ந்த நீரைக் குடிப்பதால் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு வயிற்றுப் போக்கு அல்லது சளிப் பிடித்தல் போன்ற சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு மருத்துவரைப் பார்க்காமல் கடவுளைத் தேடி என்ன பயன்?

2. மஞ்சள் காமாலை என்பது நீர் மூலமாகப் பரவுகின்றது என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தம் அந்நோய் வந்த பின் மருத்துவரைப் பார்க்காமல் நாட்டு வைத்தியம் பார்ப்பதும், பத்து வைத்தல் கண்களில் நாட்டு மருந்து விடுதல், சூடு வைத்தல் போன்ற செயல்களில் படித்தவர்கள் கூட ஈடுபடுவது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்? மருத்துவ ரீதியாக, கல்லீரல் செயல்பாடு குறைவு போன்ற காரணங்களால் ஏற்படும் உயிர்க்கொல்லி நோயான மஞ்சள் காமாலை நோய்க்கு மந்திர மாயங்கள் பலனளிக்குமா?

3. உடல் உறுப்புகளைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டும் புதுக் கருவிகள் எத்தனையோ வந்து விட்ட பின்பும் எலும்பு முறிவு, சதைப் பிறழ்தல், இரத்தக் கட்டு போன்றவற்றிற்குக் கூட நாட்டு மருத்துவர்களிடம் சென்று தேவையற்ற அவதிகளைச் சந்திக்க வேண்டியது அவசியம்தானா
4. பெண்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளைக் கூட பெண் மருத்துவர்களிடம் தெரிவித்து தகுந்த சிகிச்சை பெறாமல் கருக் கலைப்பிற்கு நாட்டு மருந்து உட்கொள்தல், கழிப்புக் கழித்தல், அதிக ரத்தப் போக்கிற்கு காரணமில்லாமல் பூஜைகள் மூலம் சரி செய்ய முயற்சித்தல் போன்ற மூடப் பழக்கங்கள் இன்னும் மாறாமலிருப்பது கொடுமையான விஷயம்தான்.

5. அரச மரத்தைச் சுற்றி அடி வயிற்றைத் தடவிப் பார்- என்று ஒரு பழமொழியைத் தவறாகச் சொல்லிக் கொண்டு நவீன மருத்துவத்தின் மூலம் கிடைக்கும் குழந்தை வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் எத்தனையோ பேர் இன்னும் மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

நவீன காலத்தில் மருத்துவர்களை நாடிச் செல்லாமல் பூசாரிகளிடமும், நாட்டு மருத்துவர்களிடமும் சென்று நாம் ஏமாறலாமா? ஏமாற்றமடைந்தால் கூட பரவாயில்லை, மூட நம்பிக்கையில் நம் உயிரை இழக்கலாமா? சிந்திப்போம்... செயல்படுவோம்...
..................................முத்துக்கமலம்.

1 comments:

  1. கயல்விழிThursday, August 03, 2017

    கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் விக்கிப்பீடியவினை படித்து பின்பற்ற வேண்டாம் என்று மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ஏனெனில் விக்கிபீடியா யாரும் பதிவு செய்யலாம் .தவறான தகவல்களால் மாணவர்கள் அறிவு மழுங்கக்கூடாது என்பது ஆசியர்களில் விருப்பம்.உங்களுக்கும் அதுவே.

    ReplyDelete