'குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / பகுதி: 06

 


மகாபாரதக் கதையில் வரும் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கொள்ளுப்பாட்டி, சத்தியவதி ஆவார். வேதங்களையும் மகாபாரதத்தையும் தொகுத்தவருமான வியாசரை இளவயதில் பெற்றெடுத்தத் தாய், ஒரு நாள் இவளின் படகில் முனிவர் பராசரர் பயணம் செய்தார். பாதி பயணத்தின் போது சத்தியவதியின் மீது மோகம் கொண்டு படகைச் சுற்றி பனிப் படலம் ஏற்படுத்தி அல்லது ஒரு மேகத்திரைக்குப் பின் இருவரும் கூடுவதாக மகாபாரதத்தில் காட்டப்படுகிறது. ஆகவே  பராசரரைக் கூடியபோது, திருமணம் என்ற நெறி வழக்கில் வந்திருக்கவில்லை. ஆண் - பெண் கூடுவதற்குரிய நேரம், இடம் என்ற வரம்புகள் கூட நிர்ணயிக்கப் பட்டிராத காலம் என்று கூடக் கொள்ளலாம் என்று கருதுகிறேன்.

 

 

ஒருவகையில் மகாபாரத இதிகாசம், மானுட சமுதாய வரலாற்றைச் சொல்வதாகவே கொள்ளலாம். மகளிர் நிலையை இந்த வரலாற்றில் மிகத் தெளிவாகக் காண முடிகிறது.

 

இன்னும் ஒரு உதாரணமாக, இளவரசி 'குந்தி ப்ருதா' ஒரு நாள் காலை விழிக்கும் போது சூரியன் உதிப்பது அவளுக்கு தெரிந்தது. எப்படி சூரியன் இருப்பார் என்று எண்ணுகிறபோதே, சூரியன் மனித ரூபத்தில் தென்பட்டான், வந்தான், அவளை நாடினான். அதுமட்டும் அல்ல,  கன்னியாகவே, அவள் விருப்பம் அரும்பி மலராத நிலையில், தாயாக்கப் பட்டாள். ஆனால், சத்தியவதிக்கு இருந்திராத சமூக அச்சம் குந்திக்கு வந்து விடுகிறது. ஏன் என்றால், பெண்ணின் தாய்மை, ஓர் ஆணுக்கு அவள் உரியவளாகாத நிலையில், சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதன்று என அன்று சமூக நீதி அறிவுறுத்தப்படுகிறது. எனவே,  தன் உடலின் ஒரு பகுதியாக வயிற்றில் வைத்து உருவாக்கிய சேயை, மார்போடு அனைத்துப் பாலூட்டிச் சீராட்டும் உரிமையற்று, ஆற்றில் விடுகிறாள். காலமும் அதன் கோலமும்  சத்தியவதிக்கும் குந்திக்கும் இடையில் மாறிவிடுகிறது.

 

 

பாண்டுவின் மைந்தர்கள் - பாண்டவர்கள் என்று பொதுவாகக் குறிக்கப் பெற்றாலும், இன்னமும்  பார்த்தன் என்றும் கெளந்தேயன் என்றும் அருச்சுனன் மட்டும் குந்தியின் [பிரதையின்] மகனாகவே சிறப்பிக்கப் பெறுகிறான். கர்ணன் - ராதை வளர்த்த பிள்ளை,→ ராதேயன் (ராதா மகன்) என்று அவள் மகனாகவே வழங்கப்படுகிறான் என்பதும் குறிப்பிடத் தக்கது. அதிதி ஆதித்யர்கள்  [காசிபர் - அதிதி இணையர்களின் புதல்வர்கள் ஆதித்யர்கள் என்று அழைக்கப் பட்டனர்], கிருத்திகா கார்த்திகேயன் [Lord Murugan, Who has been brought up by Krittika] →  என்ற பெயர்களெல்லாம் தாயின் பெயரைக் கொண்டே வழங்கப் பெற்றிருக்கின்றன.

 

தந்தை ஆதிக்கம் மேலும் மேலும் வலுப்பெற, ஆண்-பெண் உழைப்பு பிரிவினை, அடித்தளம் அமைத்தது எனலாம். ஆடவர் வெளியே சென்று வேட்டையாடினர்; விலங்குகளை உயிருடன் பிடித்துப் பழக்கினர். கொட்டிலில் கொண்டு வந்து கட்டினர். காடுகளை அழித்து நிலம் சீராக்கி, விளை நிலமாக்கியும், நீர் பாய்ச்சியும் தானிய உற்பத்தியிலும் ஈடுபட்டனர். பெண் ஓரிடத்தில் நிலையாகத் தங்கி நெருப்பைக் காத்தாள். கன்று காலிகளைப் [கன்றுடன் கூடிய பசு, கன்று காலி எனப்படும்] பேணினாள். நீர் கொண்டு வந்து உணவு தயாரிக்கும் பொறுப்பை ஏற்றாள். கன்னிப் பெண்டிர் பால்கறந்து தயிர் மோர் தயாரித்தனர். குழுவினருக்கான தோல், கம்பளி ஆடைகளைத் தயாரித்தனர். இந்த தொடக்கம், பின்னர் பருத்தி பட்டு நெசவு வேலையே பெண்களுக்குரியதாக ஆயிற்று எனலாம். அடுப்பும், பாண்டங்களும் இவள் கைகளினால் உருவாயின. சுருக்கமாக, இல்லத்தில் இருந்தபடி செய்யும் பணிகளனைத்தும் இவள் செய்தாள்.


தந்தை ஆதிக்கம் , ஆரம்ப  காலங்களில் பெண்ணைச் சுதந்திரம் உடையவளாகவே வைத்திருக்கிறது. என்றாலும், பெண் என்பவள் மனையறம் பேணி, மக்களைப் பெற்றுச் சமுதாய வளர்ச்சிக்கு அவள் தேவை  என்ற பங்கிலேயே திருமணங்கள் அல்லது கூட்டு வாழ்க்கை தொடர்ந்தது.

 

 

நாம் திரும்பவும் மகாபாரத கதைக்கு போவோமானால்,   

ஓகவான் என்ற அரசனின் குமரியான ஓகவதி, சுதர்சன முனிவரின் மனைவி ஆவார். இல்லற தருமத்தில் முக்கியமான பண்பாடு விருந்தோம்பலாகும் என்று தம் மனைவி ஓகவதியிடம் ஒருமுறை  வலியுறுத்தினார். பின் ஒரு முறை முனிவர் வெளியே சென்ற நேரம், தர்ம தேவன் ஒரு விருந்தினராக ஆசிரமத்துக்கு வந்தார். அனைத்து மரியாதைகளையும், உபசாரங்களையும் அவள் செய்த பின், விருந்தினராக வந்த தர்ம தேவன், அவளுடைய உடல் சுகத்தையும் கேட்கிறார். இவளும் விருந்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுகிறாள்.  முனிவர் ஆசிரமம் திரும்பியதும் நடந்தவற்றை கேள்விப்பட்டார். அவர் கோபப் படவில்லை. அப்பொழுது தருமதேவர் தான் யார் என்று காட்டி, "பதி சொல் தாண்டாத நீ,[அதாவது விருந்தினரை மகிழ்விக்கும் விருந்தோம்பல் தருமத்தை சொன்னபடி கடைபிடித்த நீ,] வாழ்க்கை நிறைவுற்றதும் நதியாக ஓடி, மானிடரின் பாவத்தை போக்குவாய்" என்று கூறி மறந்தார் என்று கதை கூறுகிறது. அவளின் கணவன் சுதர்சன முனியும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்.

 

ஆனால் பிறிதொரு கதையில், கவுதமர் என்ற ஒரு முனிவரின் மகன் சிரகாரி ஆகும். ஒரு முறை முனிவர் வெளியே சென்ற தருணம், இந்திரன் ஒரு விருந்தினராக ஆசிரமத்துக்கு வந்தார். சிரகாரியிடம், அவன் அன்னையைத் தான் அநுபவிக்க விரும்புவதாகத் தெரிவிக்கிறான். விருந்தோம்பல் பண்பாட்டின் மேன்மை கருதி, சிரகாரி அன்னையை விருந்தினருக்கு அளிக்கிறான். (இங்கு பெண் - தாய் - , வெறும் சடப்பொருள் போல் கையாளப் பட்டுள்ளதை காண்கிறோம்). ஆசிரமம் திரும்பிய முனிவர் மனைவியின் நடத்தையில் கோபப் பட்டு, தன் மகனை கூப்பிட்டு தாயை வெட்டி கொல்லும் படி கூறுகிறான் என இந்த வரலாறு கூறுகிறது.

 

இரண்டு நிகழ்வுகளும் ஒரே மாதிரி இருந்தாலும், இரு கணவர்களின் முடிவும் மனநிலையும் வெவ்வேறாக இருப்பதை காண்கிறோம். இது அன்று திருமணம் என்று நெறிப்படா விட்டாலும், ஓர் ஆணும் ஒரு பெண்ணும் இச்சை கொண்டு, வாழத் தலைப் படத் தொடங்கியதும், ஓரளவில் அது ஒருத்திக்கு ஒருவன் என்ற ஒரு ஒழுங்கில் பரிணமிப்பதை காண்கிறோம்.

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

பகுதி 07 தொடரும் .....வாசிக்கத்  தொடுங்கள் Theebam.com: 'குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / பக...7: 

ஆரம்பத்திலிருந்து வாசிக்கத்  தொடுங்கள் - Theebam.com: 'குடும்பங்கள் / திருமணங்களின் பரிணாமம்' / பகுதி: 01: 

0 comments:

Post a Comment