மூளை வளர்ச்சி, அறிவாற்றலை மேம்படுத்தும் கோலின் (Choline)



கோலின் குறித்து இதுவரை நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் இது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதிக அளவில் கோலின் எடுத்துக்கொள்வது அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்துவதுடன், கவனக்குறைவு, டிஸ்லெக்ஸியா உள்ளிட்ட நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகளை தடுக்கும் திறன் கொண்டிருக்கலாம் என்று தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன.

மனிதர்களின் நரம்பியல் வளர்ச்சியில் கோலின் முக்கிய பங்காற்றுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

கர்ப்ப காலத்தில் கோலின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்ட தாய்மார்கள், குறியீடுகள் மற்றும் தகவல்களை விரைவாக புரிந்து கொள்ளும் திறன் கொண்ட குழந்தைகளைப் பெற்றேடுத்தனர் என்பது ஒரு ஆய்வில் தெரியவந்தது.

விஞ்ஞானிகள் கோலின் ஒரு அதிசய ஊட்டச்சத்து என்கிறார்கள். ஆனால் அது பெரிதும் கவனிக்கப்படவில்லை.

கோலின் ஒரு "அத்தியாவசிய" ஊட்டச்சத்து. நமது ஆரோக்கியத்திற்கு தேவையான இதனை,  நமது உணவிலிருந்தே  பெற வேண்டும்.

மாட்டிறைச்சி, முட்டை, மீன், கோழி மற்றும் பால் போன்ற விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவுகளில் பெரும்பாலும் கோலின் காணப்படுகிறது.

அதே சமயம், வேர்க்கடலை, கிட்னி பீன்ஸ், காளான் மற்றும் ப்ரோக்கோலி போன்றவற்றிலும் உள்ளது. இருப்பினும், விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவுகளில், தாவர அடிப்படையிலான உணவுகளில் உள்ளதை விட அதிக அளவு கோலின் காணப்படுகிறது.

நம் உடலில் பல்வேறு உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு, குறிப்பாக கல்லீரல் செயல்பாட்டுக்கு கோலின் அவசியம். போதுமான அளவு கோலின் இல்லாவிட்டால், பல்வேறு பிரச்னைகள் உருவாகலாம்.

"கோலின், கல்லீரலிலிருந்து கொழுப்பை வெளியே அனுப்புவதற்கு உதவுகிறது. மேலும், ஒருவருக்கு கோலின் குறைபாடு இருந்தால், அவருக்கு கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படியலாம் (fatty liver).

தாய்மார்களின் கர்பகாலத்தில் கரு வளர்ச்சியடையும்போது, மூளையில் செல் பெருக்கம் குறைய, கோலின் குறைபாடு காரணமாக அமைகிறது. இது பல்வேறு தீங்குகளை விளைவிக்கலாம்.

எனவே மூளையில் கோலினின் பங்கு மிகவும் முக்கியமானது.

நரம்பு செல்களின் மூலம் மூளையிலிருந்து நமது உடலுக்கு செய்திகளை கொண்டு செல்லும் அசிட்டைல்கோலின் என்ற நரம்பியல் கடத்தியை உற்பத்தி செய்யவும் கோலின் உதவுகிறது.

அசிட்டைல்கோலின், நமது நினைவாற்றல், சிந்தனை மற்றும் கற்றலுக்கு தேவைப்படும் மூளை நரம்பு செல்களில் முக்கிய பங்காற்றுகிறது.

அத்துடன், கோலின் குறைபாடும் அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய் போன்ற நரம்புச் சிதைவுக் கோளாறுகளுடன் தொடர்புடையதாக உள்ளது.

அதிக அளவில் கோலினை உட்கொண்டால், பதற்றம் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வில், அதிக அளவில் கோலினை சேர்த்துக்கொள்வதற்கும், மனச்சோர்வு ஏற்படும் ஆபத்து குறைவதற்கும் தொடர்பு உள்ளது.

கருப்பையில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு கோலின் மிகவும் முக்கியமானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள் தங்களின் தாய்மார்களுடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிக கோலினுடன் பிறக்கின்றன. கருப்பையில் உள்ள கோலினின் அளவு, குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சியுடன் தொடர்புடையதாக இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இந்த நன்மைகள் குழந்தை வளர்ந்த பிறகும் பல ஆண்டுகள் தொடரக்கூடும்.

அக்காலத்தில் அதிக அளவு கோலின் உட்கொண்ட கர்ப்பிணி பெண்களின் குழந்தைகள், தங்கள் ஏழு வயதில் செய்துக்கொண்ட நினைவாற்றல் பரிசோதனையில் உயர் மதிப்பெண்கள் பெற்றதாக ஓர் ஆய்வு கூறுகிறது.

எனவே , ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது, அவர் போதிய அளவில் கோலின் பெறவில்லை என்றால், பிறக்கும் குழந்தைகளில் கவனக்குறைவு/அதிக செயல்பாட்டு குறைபாடு (ஏடிஎச்டி) தொடர்புடைய நடத்தைகள் காணப்படலாம்.

பெரியவர்களுக்கு தினசரி 400 மில்லிகிராம், கர்ப்பிணிகளுக்கு 480 மில்லிகிராம், மற்றும் தாய்ப்பால் வழங்கும் பெண்களுக்கு 520 மில்லிகிராம் கோலின் பரிந்துரைக்கப்படுகிறது.

ஒரு முட்டையில் சுமார் 150 மில்லிகிராம் கோலின் உள்ளது.

ஒரு கோழியின் மார்புத் துண்டில் சுமார் 72 மில்லிகிராம், மற்றும் ஒரு கைப்பிடி வேர்க்கடலையில் சுமார் 24 மில்லிகிராம் கோலின் காணப்படுகிறது.

ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாகக் காணப்படும் மாதவிடாய் நின்ற பெண்கள் மற்றும் கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிந்தவர்களுக்கு கோலின் அதிகம் தேவைப்படலாம்.

ஒவ்வொருக்கும் இடையே உள்ள மரபணு வேறுபாடுகளால், சிலருக்கு கோலினின் தேவை அதிகமாக இருக்கலாம்.

சைவ உணவு முறையை பின்பற்ற விரும்புவோர், இந்த ஊட்டச்சத்தை போதுமான அளவில் பெற முடியாது என்ற சில கவலைகள் உள்ளன.

இருப்பினும் வளர்ந்த நாடுகளில் கோலின் சப்ளிமெண்ட்கள் பரவலாகவும் கிடைக்கின்றன.

முட்டை உண்பவர்கள், முட்டை உண்ணாதவர்களை விட, சுமார் இரண்டு மடங்கு அதிக கோலினை உட்கொள்கிறார்கள் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சராசரியாக ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் கோலின் தேவை என்று, ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள்ளது.

[ஆதாரம்- இலண்டன் பிபிசி ஆய்வுக்கட்டுரைநன்றி]

0 comments:

Post a Comment