பழகத் தெரிய வேணும் – 63


முதிர்ச்சியும் குழந்தைத்தனமும்

இது என்னோட இடம்!”

பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்குப் பிறருடன் ஒத்துப்போகத் தெரியாத வயது. எல்லாவற்றிற்கும் போட்டியிட்டு, சண்டை பிடிப்பார்கள். நான்கு வயதுக்குள் பிறருடன் இணைந்து பழகும் திறன் வருவதில்லை.

ஆனால், வயது ஏறியபின்னும், இப்படியே நடப்பவர்களை என்னவென்று கூறுவது?

 

::கதை::

எங்கள் பள்ளியில் நடந்த ஒரு விழாவின்போது, காலியாக இருந்த ஓர் இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.

அங்கு வந்த என் சக ஆசிரியையான சாரதா, “இது என்னோட இடம்!” என்று சற்று எரிச்சலுடன் கூறியபோது, முதலில் ஆச்சரியமாக இருந்தது.

அவள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னபோது, எனக்குப் பொறுக்கவில்லை. “குழந்தைபோல் பேசாதே,” என்றேன் கண்டிப்பான குரலில்.

அதை எதிர்பார்க்காத சாரதாவின் முகத்தில் அதிர்ச்சி. “நான்தான் இங்கே உட்கார்ந்து கொண்டிருந்தேன்,” என்றாள் விடாப்பிடியாக. அவளால் தோல்வியை ஏற்க முடியவில்லை.

வயதிற்கும், முதிர்ச்சிக்கும் சம்பந்தம் கிடையாது.

எத்தனை வயதாகியும் குழந்தைத்தனமாக நடப்பவர்களுக்கு மனமுதிர்ச்சி குறைவு. இத்தகையவர்கள் ஒன்றுமில்லாத சமாசாரங்களைக் குறித்து விவாதம் செய்வார்கள். அவர்களுக்குச் சம்பந்தமே இல்லாத விஷயங்களிலும் மூக்கை நுழைப்பார்கள்.

எல்லாவற்றிலும் குறை கண்டுபிடித்துக்கொண்டிருப்பதும் முதிர்ச்சி குறைவு என்பதைத்தான் காட்டுகிறது.  (விமர்சகர்கள் இந்த விதிக்கு விலக்கு).

 

::கதை::

பள்ளிக்கூட வருடாந்திர விளையாட்டுத் தினத்தன்று நடந்து முடிந்த குறைகளை அதற்கு மறுநாள் முழுவதும், பல ஆசிரியைகள் அதற்கு பொறுப்பு ஏற்றிருந்த மிஸஸ் சூவிடம் (Mrs. Choo) சொல்லிக்கொண்டே இருந்தார்கள். எல்லாவற்றிற்கும் அவள்தான் காரணம் என்பதுபோல் அவளைத் தாக்கிக்கொண்டே இருந்தார்கள்.

அவளைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருந்தது.

வேலை முடிந்து, வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, என் தோளில் கைபோட்டாள் மிஸஸ் சூ.

நான் விழித்தேன். அவளுடன் அவ்வளவாகப் பேசியதில்லை. எதற்குத் தோழமை?

தாங்க்ஸ். நீ ஒருத்திதான் புகார் செய்யவில்லை,” என்று விளக்கினாள், நன்றியுடன்.

நான் லேசாகச் சிரித்து, “வருடத்தில் ஒரு நாள். அதுவும் முடிந்துவிட்டது. அதைப் பற்றிப் பேசி இனி என்ன ஆகப்போகிறது!” என்றேன்.

மருந்து மாத்திரைகளால் மட்டும்தான் பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதில்லை. எல்லாத் தொழிலிலும் உண்டு.

வயதில் இளையவர்களுடன் ஒரு நாளின் நீண்ட பகுதியைக் கழிப்பதால், சில வருடங்களிலேயே ஆசிரியர்களும் அவர்களைப்போலவே நடக்கும் அபாயம் இருக்கிறது.

 

ஒருவருக்கு முதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது என்று எப்படி அறிவது? (முதலில் அமையாவிட்டாலும், பழகிக்கொள்ளலாம்).

1  ஒரு காரியத்தில் இறங்குமுன், அதனால் விளையக்கூடும் வேண்டாத விளைவுகளைப்பற்றி நன்கு யோசிப்பார்கள்.

இதற்கு விலக்கு குழந்தைகள்.

மின்சார மின்தூக்கியில் உற்சாகமாகக் குதித்து ஏறுவார்கள், உடன் இருக்கும் தாய் வருகிறாளா என்றுகூடப் பார்க்கத் தோன்றாது. மேலை போனதும் தனியாக இருக்கிறோமே என்ற அச்சம் எழும்.

அதை அன்றுடன் மறந்து, மறுபடியும் அந்தத் தவற்றையே செய்வார்கள்!

ஒரு சிறுவன் அப்படிச் செய்ததற்காக, பயந்துபோன அவன் அன்னை, அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

நான், “விடுங்கள். என் பேரனும் இப்படித்தான் பண்ணுவான். நானும் அவன் அம்மாவும் இரண்டு கைகளையும் இறுக்கிப் பிடித்துக்கொள்வோம், ஒவ்வொரு முறையும்!” என்று சிரித்தேன்.

அவளுடைய மகன் கூடுதலாக அடி வாங்காமல் பிழைத்தான்.

 

2   தம் பிழைகளுக்குப் பொறுப்பு ஏற்பார்கள்.

தாம் வாழ்வில் முன்னேறாததற்குக் காரணம் பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் என்று பழியைப் பிறர்மீது போடுவோர் பலர்.

`என் தந்தை குடிகாரர். குடும்பத்தில் அக்கறையே செலுத்தவில்லை. அவர் தக்க வழி காட்டியிருந்தால், எங்கேயோ போயிருப்பேன்!’

`என் தாய் எனக்கு ரொம்பச் செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டாள். நான் செய்யவேண்டிய ஒவ்வொரு காரியத்தையும் தானே முன்னின்று செய்வாள். நான் அவ்வளவு அருமையாம்! இப்போது சுய சிந்தனையே இல்லாது, பிறரை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது!’

ஏன் இப்படி ஆகிவிட்டோம் என்று புரிந்தபின், தம் போக்கை மாற்றி அமைத்துக்கொள்வது தம் கையில்தான் இருக்கிறது என்ற முதிர்ச்சி இவர்களிடம் கிடையாது.

 

3 உள்ளுக்குள் அச்சம், துக்கம் போன்ற தவிர்க்கமுடியாத உணர்ச்சிகள் கொந்தளித்தாலும் அவைகளை அடக்கிவிடுவார்கள். வெளியில் கொட்டிவிடாது, அமைதியாகவே காணப்படுவார்கள்.

சின்னஞ்சிறு குழந்தைப் பருவத்திலேயே இக்குணம் வெளிப்படும். சில குழந்தைகள் பசி வந்தால், பாலுக்காக அலறுவார்கள். (வளர்ந்தபின், அடக்கம் ஏற்படலாம்). சிலர் முனகலோடு நிறுத்திக்கொள்வார்கள்.

பெரியவர்களானதும், பணக்காரரோ, ஏழையோ, வாழ்வில் சுகம் மட்டுமே அனுபவிப்பவர்கள் எவருமில்லை.

ஆனால், எதிர்ப்படும் இடர்களைச் சமாளிக்க முடியாது, குரலை உயர்த்தியோ, பிறரைத் தாக்கியோ பேசுவது முதிர்ச்சியா?

 

4 தமக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துக் கொண்டிராது, பிறருடைய நலனிலும் அக்கறை செலுத்துவார்கள்.

இளவயதிலேயே இந்தக் குணத்தைப் பழக்கவேண்டும்.

 

::கதை::

ஆறு வயதான அச்சிறுமி, “எனக்கு அந்த முழு சாக்லேட்டையும் குடுத்தாத்தான் வாங்கிப்பேன்,” என்று அடம் பிடித்தாள். தானே முக்கியமாகக் கருதப்பட வேண்டும் என்ற சுயநலம் மிகுந்திருந்தது அவள் கோரிக்கையில்.

அவளைவிட சற்றே பெரியவளான அக்காள் கூசிப்போனாள்.

கண்டிப்பான குரலில், “அதெல்லாம் முடியாது. பிறருடன் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும்,” என்று தாய் கூறியபோது, “அப்படியானால் எனக்கு வேண்டாம்!” என்றாள் சிறுமி, வீம்புடன்.

உனக்கு வேண்டுமா?” என்று அக்காளிடம் கேட்க, அவள் குரலடைக்க, “வேண்டாம்!” என்று மறுத்தாள். தனக்கும் பகிர்ந்தளிக்க தங்கைக்கு மனம் வரவில்லையே என்ற வருத்தம் அவளுக்கு.

ஒருத்தருக்கும் வேண்டாமா? சரி,” என்று தாயே சாக்லேட்டைச் சாப்பிட்டாள்.

இந்த நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த தந்தை, “அறுபது காசு பெறாத அற்பப் பொருள்! இதைச் சின்னவளிடமே கொடுத்திருக்கலாமே!” என்றார்.

இதன் விலை முக்கியமில்லை. பிறருக்கும் பகிர்ந்து கொடுக்கவேண்டும் என்று அவளுக்குப் புரியவேண்டாமா?” என்று விளக்கினாள் தாய்.

 

5 புகழ், இகழ் இரண்டுமே தம்மை அதிகமாகப் பாதிக்க விடமாட்டார்கள்.

சிறு குழந்தைகளைப் புகழ்ந்தால் அவர்கள் அதை ஏற்று, நம்புவார்கள். தன்னம்பிக்கை வளர்வது இப்படித்தான். ஆனால், அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்தாலோ, கர்வம்தான் ஏற்படும்.

பாராட்டுதற்குரிய தன்மைகள் பல இருந்தாலும், அதனால் கர்வப்பட்டு, சறுக்காமலிருக்க ஒரு வழி: “பிறர் புகழ்ந்தால், `நன்றி’ என்று சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இரு. இல்லாவிட்டால், கர்வம் தலைக்கேறிவிடும்!” என்று சிறு வயதிலேயே ஒருவரை எச்சரிப்பதால் பலன் கிடைக்கும்.

 

இகழ்ச்சியை எப்படிச் சமாளிப்பது?

நம்மை இகழ்பவர் தவறே புரியாது, குறைகளே இல்லாதவரா என்று யோசித்தாலே போதுமே!

 

6 தங்களுக்குச் சம்பந்தம் இல்லாத சமாசாரங்களுக்காக அதிகம் அலட்டிக்கொள்ளாதிருப்பார்கள். உலகை மாற்ற முடியாது. ஆனால், நம்மை மாற்றிக்கொள்ளலாம் என்று புரிந்தவர்கள்.

இப்போக்கு கூட்டுக் குடும்பங்களில் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும்.

 

`இப்படிச் செய்யாதே!’

`உன் வயதில் நான்..,’ என்றெல்லாம் மறைமுகமாகக் கண்டனம் செய்தால், பிறர் கேட்கிறார்களோ, இல்லையோ, சொல்பவர்களைப் பிடிக்காமல் போகும்.

ஒரு குழுவில் இணைந்து வேலை செய்யும்போதும், தான் செய்ய வேண்டியதில் கவனம் செலுத்தினால் போதாதா? பிறர் கேட்டால் மட்டுமே உதவி செய்வதைவிட்டு, ஓயாமல் `அறிவுரை’ என்ற பெயரில் வீண் அதிகாரம் எதற்கு?

 

7 செய்யும் தொழிலைக் கவனமாகச் செய்வார்கள். எவ்வளவு அதிருப்தி ஏற்பட்டாலும், பாதியில் விட்டுச் செல்வது இவர்கள் குணமல்ல.

 

::கதை::

சிபாரிசுடன் தன் மகனை அந்தத் தனியார் அலுவலகத்தில் சேர்த்திருந்தாள் பானு.

ஒரு வருடத்திற்குள், அவனுக்குக் கொடுக்கப்பட்ட போனஸ் தொகையானது மேலதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டதைவிட மிகக் குறைவாக இருக்கிறது என்று ஆத்திரப்பட்டு, சண்டை பிடித்தாள். தனக்குச் சரியெனப் படாத எந்த ஒன்றையும் அவளால் பொறுத்துப்போக முடியவில்லை.

என் மகன் இனி இங்கு வேலை பார்க்கவேண்டாம்,” என்று அவனுடைய எதிர்காலத்தையும் பாழடித்தாள், நல்ல வேலை கிடைப்பது துர்லபம் என்று உணராது.

தாயின் போக்கு புரியும்போது, மகன் அவளைக் குறை கூறுவான்.

முதிர்ச்சி உடையவர்களோ என்றாவது பாராட்டு பெறுவார்கள் — பெயர், புகழுக்காகச் சுயமாகப் பெருமுயற்சி எடுக்காவிட்டாலும்.

:-நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...  Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1

0 comments:

Post a Comment