முல்லைத்தீவில் ஒரு இரத்தச் சிவப்பு நிறம் கொண்ட அடிவானத்தின் பின்னால், சூரியன் அன்று மூழ்கியது. தொலைத்தூர எறிகணையிலிருந்து எழும் புகையால் மாலைக் கதிரவனின் ஒளி மறைக்கப் பட்டிருந்தது. காடுகளை அண்டிய ஒரு சிறிய, தற்காலிக மருத்துவமனையில், அண்மையில் திருமணம் செய்த கணவன் மனைவியான, மருத்துவர் மேன்மன் மற்றும் மருத்துவர் தாரகை அருகருகே வேலை செய்தனர். அவர்கள் தங்கள் இளமைக் குடும்ப வாழ்வை மற்றும் அதில் புதைந்து இருக்கும் இன்பத் துளிகளை அனுபவிக்காமல், தம் மக்கள் படும் வேதனைக்கும் துன்பத்துக்கும் ஆதரவாகக் கைகொடுத்து, மருத்துவ உதவிகளை தன்னலமற்று, தங்களால் இயன்றவரை செய்ய முடிவெடுத்து, இன்று அங்கு கடமையாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்ற உண்மை எல்லோருக்கும் தெரியாது.
தாரகை என்றால் கூட்டமாக ஒளிர்பவை அல்லது விண்மீன்கள் என்று பொருள்படும். அதேபோல மேன்மன் என்பது மேன்மையான ஆக்கம் நிறைந்தவன். இரண்டு பேரின் கூட்டும் சேவையும் அவர்களின் பெயருக்குளே அடங்கிவிட்டன. அவர்கள் இருவரும் யாழ்ப்பாண மருத்துவப் பீடத்தில் தான் முதல் முதல் சந்தித்தனர். நோய்களைக் குணப்படுத்துவதற்கான பகிரப்பட்ட ஏக்கம் கலந்த எதிர்பார்ப்புகளுக்கு [அபிலாஷைகளுக்கு] மத்தியில், அவர்களின் காதல், பல்கலைக்கழக வளாகத்திலும் பண்ணைக்கடல் ஓரத்திலும் நூலகத்திலும் மலர்ந்தது. அவர்களின் திருமணத்திற்குப் பிறகு, அமைதியான வீடு மற்றும் குழந்தைகளின் கனவுகள் அவர்களின் உரையாடல்களை நிரப்பின. ஆனால் அவர்களின் தாய்நாட்டில் போர் வெடித்தபோது, எண்ணற்ற அப்பாவி உயிர்கள் சிதைந்தபோது, மேன்மன்னும் தாரகையும் உன்னதமான முடிவை எடுத்தனர்.
"தாரகை, போரின் கொடூரத்தால், அப்பாவிக் குழந்தைகள் இறக்கும் போது, தாய்மார்கள் தங்கள் மகன்களை இழக்கும் போது, நாம் மருத்துவர்கள் என்று சொல்லிக்கொண்டு குளிரூட்டிய அறையில், எல்லா வசதிகளுடனும் இருந்து சேவை செய்யமுடியாது. எம் மக்களை, நாம் எம்மால் இயன்றவரை, எப்படியும் உதவி செய்யவேண்டும்" என்று மேன்மன், குரலில் உறுதியுடன் அவளுக்குச் சொன்னான்.
ஆனால், தாரகை தயங்கினாள், அவளுடைய இதயமே உடைந்தது. திருமணம் செய்து சில மாதங்களே, இன்னும் ஒரு குடும்பவாழ்வு துளிர்விடவில்லை. அவளின் கனவுகள், ஆசைகள் ... ஒரு கணம் திகைத்தாள், என்றாலும் அவள் தலையசைத்தாள். ஒன்றாக, அவர்கள் கட்டியெழுப்ப நினைத்த வாழ்க்கையை விட்டுவிட்டு ஒரு புது அடியெடுத்து வைத்தனர்.
ஐக்கிய நாடுகள் சபையும் அனைத்துலக சமூகமும் வன்னியையும் முல்லைத்திவையும் கைவிட்ட நிலையில், வான்படையும் கனரக ஆயுதப்பிரிவும் வைத்தியசாலையையும் விட்டுவிடாமல் தாக்கிய அந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் மேன்மன்னும் தாரகையும் தமது உயிர்களைச் துச்சமென மதித்து, மக்களுக்காக பணியாற்றிட இருவரும் அங்கு புறப்பட்டனர்.
மருத்துவர்களை இறைவனுக்கு அடுத்த நிலையிலேயே வைத்து மனித சமூகம் கொண்டாடும் இந்த உலகில் தான், அதே மருத்துவர்களும் பல இடர்களையும் ஆபத்துகளையும் அங்கு சந்தித்தனர். எந்தவொரு அடிப்படை வசதிகளும் அற்ற நிலையிலே உயிர் இழப்புக்களை தடுப்திலும் நோய் கிருமிகள் பரவுவதை தடுப்பதிலும் இவர்கள் சந்தித்த சவால்களை மருத்துவ உளவியல் நிபுணர்களாலேயே வரையறுக்க முடியாதவையாக, அந்தளவு மக்களிற்கு அருகில் இருந்து சாவின் நிமிடங்களையும் மக்களின் வலிகளையும் கதறல்களையும் ஒவ்வொரு மணித்துளிகளும் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டு, அங்கு இன்னும் சில மருத்துவர்கள், குறிப்பாக சத்தியமூர்த்தி, வரதராஜா, ஷண்முகராஜா, இளம்செழியன் ஆகிய மருத்துவர்கள் கடமையாற்றிக்கொண்டு இருப்பது மேன்மன்னுக்கு மேலும் தெம்பு கொடுத்தது.
அவர்கள் இருவரும் முல்லைத்தீவிற்கு கடமையாற்ற சென்ற பொழுது, இடிந்து விழுந்த சுவர்கள் மற்றும் குண்டுகளால் துளைக்கப்பட்ட மேற்கூரைகளால் அந்த மருத்துவமனை இருந்தது. மின்சாரம் இல்லை, மண்ணெண்ணெய் விளக்குகள் மட்டுமே இரத்தக்கறை படிந்த தரையில் ஒளிரும் நிழல்களை வீசியது. மருந்து மற்றும் மற்ற பொருட்கள் குறைவாக இருந்தன; நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அங்கு ஒரு ஆடம்பரமாகவும், சுத்தமான நீர் அங்கு ஒரு புதையல் [பொக்கிஷம்] போலவும் இருந்தது. நோயாளிகள் பாய்கள் அல்லது வெற்று தரையில் படுத்துக் கொண்டு, தாழ்வாரங்களுக்குள்ளும் நிரம்பி வழிந்தனர்.
ஒரு நாள், ஏழு வயதுக்கு மேல் இல்லாத ஒரு சிறுவன், அவனது உடம்பில் வெடிகுண்டு அல்லது பிற சாதனம் வெடிக்கும் போது சிதறிய சிறிய உலோகத் துண்டுகளால் துளைக்கப்பட்ட காயங்களுடன் அனுமதிக்கப் பட்டான். தாரகை அவனைக் குணப்படுத்த தன்னால் இயன்ற எல்லா வழியிலும் ஈடுபட்டாள், அவள் கண்களில் கண்ணீர் வழிந்தாலும் அவள் கைகள் உறுதியாக சிகிச்சை அளித்தது. மேன்மன் அவளுக்கு அருகில் இருந்து சிகிச்சைக்கு உதவினான். அவன் அமைதியான குரலில் அவளுக்கு வழிகாட்டிக்கொண்டு இருந்தாலும், அவன் கண்கள், எதோ ஒரு பயத்தில் இருந்தது.
சிறுவனின் தாய் வெளியில் காத்து நின்றது மட்டும் அல்ல, தன் மகனின் புகைப்படத்தை கண்ணீருடன் தடவி தடவி பார்த்துக்கொண்டு நின்றாள். தாரகையும் மேன்மன்னும் கூட தங்களுக்குள் பிரார்த்தனை செய்தார்கள். அங்கு அப்பொழுது இருந்த வசதியில் அவர்களுக்கு ஒரு உறுதியையும் வலிமையையும் கொடுக்க அது ஒன்றே துணை புரிந்தது.
அன்று இரவு அந்த சிறுவன் உயிர் பிழைத்தான். அவனது தாய் நன்றியுடன் அழுது, மருத்துவர்கள் இருவரினதும் கைகளை முத்தமிட்டாள். ஆனால் தாரகையும் மேன்மன்னும் தங்கள் அறைக்குத் திரும்பிச் செல்லும்போது, தம்பதிகளின் புன்னகை எனோ மறைந்தது.
"அவனைப் பற்றி நினைப்பதை இன்னும் என்னால் நிறுத்த முடியாது, மேன்மன்," தாரகை அவனின் கையைப் பிடித்துக்கொண்டு கூறினாள். “நான் காப்பாற்றும் ஒவ்வொரு குழந்தையும் ... நான் என் கண்களில், நமக்கு இன்னும் பிறக்காத, அந்த வாய்ப்பு இல்லாமல் போன குழந்தையாகத் தான் நான் பார்க்கிறேன்." என்று கவலையுடன் தெரிவித்தாள்.
"படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப் பெருஞ் செல்வர் ஆயினும், இடைப் படக்
குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,
நெய்யுடை அடிசில் மெய் பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக் குறை இல்லை தாம் வாழு நாளே."
பலவகையான செல்வங்களையும் பெற்றுப் பலரோடு உண்ணும் பெருஞ்செல்வந்தராயினும், மெள்ள மெள்ள, குறுகிய அடிகளைவைத்து நடந்து, தன் சிறிய கையை நீட்டி, அதை உணவில் இட்டு, தொட்டு, வாயால் கவ்வி, கையால் துழாவி, நெய்யுடன் கலந்த சோற்றைத் தன் உடலில் பூசிப் பெற்றோரை இன்பத்தில் மயக்கும் குழந்தைகள் இல்லாதவர்களின் வாழ்நாள்கள் பயனற்றவையாகும். அது தான் தாரகையின் கவலை.
மேன்மன் அவளை அருகில் இழுத்துக் கொண்டான். “எனக்குத் தெரியும் தாரகை. ஒவ்வொரு முறையும் நீ சோர்வாக இருப்பதைப் பார்க்கும்போது, நான் உன்னிடம், உன் ஆசையை அறியாமல், என்னுடன் வந்து இந்தச் சேவையை செய்யும்படி கட்டாயப்படுத்தி விட்டேனோ என்று எண்ணத் தோன்றுகிறது" என்றான்.
ஆனால் அவளுக்கு நன்றாகத் பதில் தெரியும். அவர்களின் வாழ்க்கை, ஒரு உன்னத நோக்கத்துக்கா அர்ப்பணிக்கப் பட்டுள்ளது என்பது! என்றாலும் அவளின் மனம் மற்றும் இளமை இன்னும் எதோ ஒன்றைத் தேடிக்கொண்டு தான் இருந்தது. என்றாலும், தியாகங்கள் எப்பவும் கனமானவை என்பது இருவருக்குமே நன்றாகத் தெரியும். அவர்களின் குடும்பத்தினரின் கடிதங்கள் இன்னும் படிக்கப்படாமல் ஒரு மூலையில் இருந்தது. அவர்களால் ஆற்ற முடியாத காயம் போல், அவர்களின் பெற்றோரிடமிருந்து தூரம் வளர்ந்தது கொண்டே போனது.
"அஞ்சு பேர் கூலியைக் கைக் கொள்ள வேண்டாம்
அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்"
என்று ஆரம்பித்த உலகநாதரின் உலக நீதி: 11,
"வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி
மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி
இன் சொலுடன் இவர் கூலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ ஏமன் தானே!"
என்று முடிவடைகிறது. இப்பாடல் நமக்கு இன்றியமையாச் சேவை செய்த ஐந்து வகை மக்களை போற்றிப் பாடுவதுடன், அதில் குறிப்பாக குலம் தழைக்க மகப்பேறு பணியாற்றிய மருத்துவச்சி, நோய் தீர்த்த மருத்துவன் அடங்கி இருப்பதைக் காண்க. மருத்துவம் புரிந்தவர்கள் மருத்துவர்கள் அல்லது வைத்தியர்கள் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்டார்கள். இதில் திறன் பெற்ற மருத்துவர்கள் தொல்காப்பியத்தில் “நோய் மருங்கறிஞர்” (தொல்காப்பியம் சொல்: 183) என்று சிறப்பாக அழைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அப்படியான சேவையைத்தான் இருவரும் போர்சூழலிலும், தங்கள் தனிப்பட்ட ஆசைகளை ஒரு புறம் தள்ளிவைத்துவிட்டு, தங்கள் புனித சேவையை அங்கு அர்பணித்துக்கொண்டு இருந்தார்கள்.
அங்கு வைத்தியசாலையில் பல தட்டுப்பாடுகள் நிலவிய போதிலும், நெருக்கடிகள் இருந்த போதிலும், அவர்களின் கடமையும் நம்பிக்கையும் மற்றும் முடிவில்லாத அவர்களின் ஏக்கமும் குறைந்தபாடில்லை. ஒரு நாள் மாலை, கடும் துப்பாக்கிச் சூட்டு சத்தத்திற்கும் மத்தியில், பிரசவ வலியில் ஒரு பெண் வந்தாள். தாரகையும் மேன்மன்னும், அங்கு இருந்த ஒரே ஒரு மண்எண்ணெய்யில் எரியும்அரிக்கேன் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில், இடிபட்ட குப்பைகளிலிருந்து மீட்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி சிகிச்சை செய்தனர். பல மணிநேர முயற்சிக்குப் பிறகு, குழந்தையின் முதல் அழுகை அங்கு, துப்பாக்கிச் சூட்டு சத்தத்தையும் குண்டு சத்தத்தையும் மீறிக் காற்றை நிரப்பியது.
அந்த பெண், பிறந்த குழந்தையின் தாய், நன்றிக் கண்ணீருடன் தாரகையைப் பார்த்தாள். “நீங்கள் எனக்கு நம்பிக்கை கொடுத்து, என் குழந்தையைக் காப்பாற்றிய உங்களுக்கு என்றென்றும் என் நன்றியும் வாழ்த்துக்களும்” என்றாள். ஆனால், இது போன்ற தருணங்கள் தான் அவர்கள் ஏன் அங்கு வந்தார்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டியது.
ஆனால் இத்தனை அவலங்களுக்கும் மத்தியில் போர் நின்றபாடில்லை. ஆசியாவிலே மிகப் பெரிய இரத்தம் நிரம்பிய சேரியாக, கொலையும் மரணமும் மலமும் கண்ணீரும் மிதக்கும் சேரியாக மாறிக்கொண்டு இருந்தது. முப்பதாண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக தமிழ் மக்களின் துயரம் நீண்டுகொண்டே இருந்தது. இது இறுதி யுத்தமல்லவா! எனவே அதற்குத் தகுந்த மாதிரியே அழிவும் துயரமும் மிகவும் உச்சத்தில் இருந்தது. ஒரு மோசமான நாள், மருத்துவமனையும் எறிகணைகளால் தாக்கப்பட்டது. நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் காட்டுக்குள் ஓடினர். மேன்மன்னும் தாரகையும் தங்களால் இயன்ற மருத்துவப் பொருட்களை எடுத்துக் கொண்டு, காயமடைந்த குழந்தைகளையும் மற்றவர்களையும் அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு அந்தநேரம் வேறுவழி ஒன்றும் தெரியவில்லை. ஏனென்றால், பாதுகாப்பு வலயங்களாக அரசு அறிவிக்கப்பட்ட இடங்களிலும் எந்த பாதுகாப்பும் அங்கு இருக்கவில்லை.
உதாரணமாக, பாதுகாப்பு வலையத்திற்குள் சிதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடங்களைக் காட்டும் படம் ஒன்றை, லண்டனிலிருந்து வெளிவரும் ‘த டைம்ஸ்' இதழ் எலிகாப்டரில் இருந்து மே 23, 2009 அன்று எடுத்துள்ளது. சிக்குண்ட மக்கள் மணல் மூட்டைகள், சாக்குப் பைகள், தலையணை உறைகள் மற்றுமுள்ள வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களைக் கொண்டு ஏவுகணை, பீரங்கித் தாக்குதல்களிலிருந்து காத்துக் கொள்வதற்கான தற்காலிகப் பதுங்குக் குழிகளை எவ்வாறு அமைத்திருந்தனர் என்பதை விளக்குகிறது. எரிபொருள் அல்லது ராணுவக் கருவிகள் இல்லாதிருப்பது, முகாம் மற்றும் அதிலுள்ள வசதிகளில் உள்ள, தற்காலிகத் தன்மையின் மூலம், அது பொதுமக்களின் வாழ்விடமே என்பது தெளிவாகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
அன்று இரவு முழுவதும் ஒரு பதுங்கு குழியில் தாரகை மற்றும் மேன்மன் மறைந்திருந்தனர். அப்பொழுது, "எவ்வளவு காலம் இப்படியே இருக்க முடியும்?" என்று தாரகை கிசுகிசுத்தாள். "இங்கு அவலப்படும் மக்களுக்கு, நாங்கள் தேவைப்படும் வரை," என்று மேன்மன் பதிலளித்தான், இருப்பினும் அவனது குரல் சந்தேகத்தால் நடுங்கியது.
முல்லைத்தீவில் மேன்மன்னும் தாரகையும் மருத்துவர்களை விட அதிகமாக மக்களால் நேசிக்கப் பட்டார்கள். காயமடைந்தவர்களுக்கு, அவர்கள் தேவதைகள். துக்கமடைந்த தாய்மார்களுக்கு, அவர்கள் நம்பிக்கை விண்மீன் [நட்சத்திரம்]. அனாதைக் குழந்தைகளுக்கு, அவர்கள் குடும்பம்.
"பேர்ஆ யிரம்பரவி வானோர் ஏத்தும்
பெம்மானை, பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப் பானை,
மந்திரமுந் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்துஅருள வல்லான் தன்னை,
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானை, புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே, ஆற்றநாள் போக்கி னேனே."
என்று திருநாவுக்கரசு சுவாமிகள், தான் வணங்கும் கடவுளை "மருந்துமாகித் தீராத நோய்களைப் போக்கியருள வல்லானாய்" என்று, ஒரு வைத்தியநாதராகப் பாடுகிறார். அதாவது ஒரு "உயிர் காக்கும் கடவுள்" என்கிறார். மருத்துவர்கள் மேன்மன் மற்றும் தாரகை, அவர்களின் இந்தப் புனித சேவையால், அவர்கள் உயிர்காத்த ஒவ்வொருவர் இதயத்திலும் வைத்தியநாதர்களாகவே, கடவுளாகவே இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்!
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment