வலவன் ஒரு காலத்தில் வளமான வன்னிப் பிரதேசத்தின் மையப் பகுதியில், ஒரு பெருமைமிக்க விவசாயக் குடும்பத்தின் தலைவராக இருந்தவர். அவரது பண்ணை ஏக்கர் பரப்பளவில் இருந்தது, அங்கு அவர் தென்றலில் நடனமாடும் நெல் வயல்களையும், ஏராளமாக காய்க்கும் பழத்தோட்டங்களையும் பயிரிட்டார். அவருடைய செல்வம், அவரது கிராமத்தில் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறையை அவருக்கு வழங்கியது - வராந்தாவுடன் [முன்தாழ்வாரம்] கூடிய ஓடு வேயப்பட்ட பெரிய கல்வீடு, வறண்டு போகாத தோண்டப்பட்ட கிணறு மற்றும் அறுவடையால் நிரம்பி வழியும் தானியக் கிணறு எனப் பல வசதிகளைக் கொண்டிருந்தது. அவருடைய பிள்ளைகளான அருண் மற்றும் மீரா, அழகான சமீபத்திய வடிவமைப்பு செய்யப்பட்ட ஆடைகளை அணிந்து, அருகிலுள்ள சிறந்த பள்ளிகளில் படித்து வந்தனர்.
ஆனால், போர் கண்ணுக்குத் தெரியாத பாம்பைப் போல வன்னிக்குள் நுழைந்து, அதன் மக்களின் வாழ்க்கையைப் பயமுறுத்தியது. ஒரு நாள் காலை, இராணுவத்தினர் கிராமத்திற்கு வந்து, அவர்களின் நிலத்தையும் - வீடு, வயல், தோட்டம் உட்பட எல்லா நிலப்பரப்பையும் - பாதுகாப்பு வலயமாக அறிவித்தனர். "உடனடியாக வெளியேறு" என்று அவர்கள் கட்டளையிட்டனர். அவர்கள் எல்லோரும் காவி இருக்கும் துப்பாக்கி முனை போல அவர்களின் வார்த்தைகள் எந்த இரக்கமும் இன்றி கூர்மையாக இருந்தன. அதில் எந்தவித கருணையையும் அவர்கள் காட்டவில்லை. வலவன் தனது முற்றத்தில் இருந்த தன் தாய்மண்ணின் ஒருபிடியை கைகளில் பற்றிக் கொண்டு எதிர்ப்புத் தெரிவித்தான், ஆனால் அவனது வேண்டுகோள் ஏளனச் சிரிப்புடனும் அலட்சியத்துடனும் அவர்களால் நிராகரிக்கப்பட்டது. இறுதியில், ஒன்றும் செய்ய முடியா நிலையில், வலவனின் குடும்பம், தங்களால் எடுத்துச் செல்லக் கூடிய விலையுயர்ந்த பொருள்கள், உடைகள் மற்றும் சில பாத்திரங்களைக் மூட்டையாகக் கட்டிக்கொண்டு தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த, உழைத்த பூமியை விட்டுவிட்டு அகன்றனர்.
பக்கத்து அயல் கிராமத்தில் குடியேறிய பிறகு, குடும்பம் மீண்டும் தன்னைக் கட்டியெழுப்ப முயற்சித்தது. வலவன் ஒரு சிறிய நிலத்தை வாடகைக்கு எடுத்தான், ஆனால் போரின் நிழல் அங்கும் பெரிதாகத் தெரிந்தது. ஒரு இரவு, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, தொலைதூர வெடிகளின் சத்தம், அவர்களின் தற்காலிக வீட்டைநோக்கி நெருங்கியது. திடீரென்று, காதை செவிடாக்கக் கூடிய பெரும் சத்தம் [கர்ஜனை] காற்றைக் கிழித்துக் கொண்டு வந்தது. ஒரு போர் விமானத்திலிருந்து வீசப்பட்ட பல குண்டுகள் அருகில் இருந்த ஒரு தெருவில் அமைந்திருந்த வீடுகளின் வரிசையை அழித்தது.
சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட, ஒரு உலோக உறைக்குள் அடைக்கப்பட்டிருக்கிற சிறுசிறு குண்டுகளைக் கொண்ட, முறையில் வடிவமைக்கப்பட்ட, ஒரே நேரத்தில் வெடித்துச்சிதறி மழைபோல பொழிந்து பல திசைகளிலும் தாக்கி துளைக்கும் தன்மையினைக் கொண்ட, கொத்துக் குண்டுகளுக்கு அங்கு பஞ்சம் இல்லை. எனவே மக்களுக்கிடையில் பயமும் பீதியும் வெடித்தது. இருளில் ஒருவரையொருவர் இறுகப் பற்றிக் கொண்டு, புகையின் வாசனையையும், அங்கு எரியும் உடல் பாகங்களின் சதையையும், அரைகுறை உயிரில் கதறும் மக்களின் சத்தத்தையும் முகர்ந்தும், கண்டும், கேட்டும், தம் உணர்வுகளையும் திணறடித்தபடி அங்கிருந்து ஓடினர். அவர்களில் வளவனும் அவன் குடும்பமும் கூட இருந்தது.
வலவனின் மனைவி, அஞ்சலை, தன் மகன் அருணுக்கு மிக அருகில் பட்டும் படாமலும் குண்டு அல்லது எறிகணையின் வெடிப்பினால் வெளியே வீசப்பட்ட துண்டுகள் பாய்வதைக்கண்டு கதறி அழுதாள். அவர்கள் இரவை ஒரு தரையில் வெட்டப்பட்ட ஒரு நீண்ட குறுகிய பதுங்கு குழியில் [அகழியில்] பதுங்கி இருந்தனர். அந்த பயங்கர நேரத்தில் தங்கள் உயிரைக் கையில் பிடித்தபடி தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். காலை வந்தபோது, அவர்கள் தற்காலிகமாக இருந்த வீடும் இடிந்து விழுந்ததைக் கண்டனர்.
மீண்டும் இடம்பெயர்ந்த வலவன் தனது குடும்பத்தை காடுகளுக்குள்ளே தற்காலிகமாக அழைத்துச் சென்றான். ஆனால் நீதியற்ற போருக்கு எல்லைகள் இல்லை. ஒரு நாள் "விசாரணை" என்ற சாக்குப்போக்கில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்ல படை வீரர்கள் வந்தனர். ஆனால் அவர்கள் எனோ வலவனை விட்டுவிட்டார்கள். வலவன் முழங்காலில் விழுந்து கெஞ்சினான், ஆனால் அவர்கள் அவரை துப்பாக்கியின் பிடியால் தாக்கி அவரது குடும்பத்தை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். நாட்கள் வாரங்களாக மாறியது, எந்த வார்த்தையும் படை வீரர்களிடமோ அல்லது அரசிடம் இருந்தோ வரவில்லை. வலவன் தான் அறிந்த, கண்ட ஒவ்வொரு தடுப்பு மையத்தையும், ஒவ்வொரு முகாமையும் தேடினான், ஆனால் அவருடைய குடும்பம் பற்றி எந்த செய்தியையும் அவனால் அறியமுடியவில்லை.
போர் தீவிரமடைந்த நிலையில், அவரது அயலவர்களின் கதைகள் வன்னியின் பகிரப்பட்ட சோகத்தை அவருக்கு பிரதிபலித்தன. படையினர் வீசிய கொத்துக் குண்டுகள் தொடர்சியாக வீழ்ந்து வெடித்த இடங்களில் தீப்பற்றிட பலர் உடல் கருகி கொல்லப்பட்டார்கள். மக்கள் வாழ்ந்த கூடாரங்கள், கொட்டில்கள் பலவும் எரிந்து நாசமாகியுள்ளன. படையினரின் அகோர இனக்கொலைத் தாக்குதல்கள் நடந்த பகுதிகளில், ஏராளமான மக்களின் உடலங்கள் சிதறிக் கிடந்தது எனவும் பாதுகாப்புக்காய் மக்கள் ஓடிப் பதுங்கிய காப்பகழிகளுக்குள்ளும் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததாலும் பெருமளவிலான மக்கள் அவற்றுக்கு உள்ளேயே கொல்லப்பட்டார்கள் எனவும் இதில் காயமடைந்தவர்கள் ஏராளமானோர் அந்த நேரத்தில் அதிகளவில் இறந்து கொண்டார்கள் எனவும் கொல்லப்பட்டவர்களை அங்கு புதைத்துவிட்டு படுகாயமடைந்தவர்களை தற்காலிக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அங்கிருந்த மருத்துவமனை மரண ஓலம் நிறைந்திருந்ததாக எனவும் பள்ளிப் பேருந்து மீதும் கூட எறிகணை வீசியது எனவும் மோதலில் எந்தத் தொடர்பும் இல்லாத அப்பாவி குழந்தைகள் பலர் கொல்லப்பட்டனர் எனவும் குடும்பங்கள் பல தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர் எனவும் வேகவைத்த இலைகள் மற்றும் சேற்று நீரில் பலர் உயிர் பிழைத்தனர் எனவும் வான்வழித் தாக்குதல்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தலின் கீழ் கர்ப்பிணிப் பெண்கள் பதுங்கு குழிகளில் பிரசவித்தார்கள் எனவும் அவர் அறிந்துகொண்டார்.
"மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப
இருங்கண் குழிசி கவிழ்ந்துஇழுது மறப்பச்
சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப
உழவர் ஓதை மறப்ப விழவும்
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப"
முரசு முழங்கவில்லை. யாழ் வாசிக்கப்படவில்லை. அகன்ற தயிர்ப்பானை கவிழ்த்து வைக்கப்பட்டு, வெண்ணெய் கடையாமல் உள்ளது. வண்டுகள் மொய்க்கும் மதுவை சுற்றத்தார் அருந்தவில்லை. உழவர் உழவுத் தொழிலைச் செய்யவில்லை. சிறிய ஊர்களின் தெருக்களில் விழாக்கள்நடைபெற வில்லை. அப்படியான ஒரு நிலையில் தான் வலவனும் மற்ற ஊர்மக்களும் அவ்வேளையில் இருந்தனர்.
வலவன் தற்காலிகமாக தங்கி இருந்த அகதி முகாம்களில் பட்டினி மற்றும் நோயினால் மக்கள் இறப்பதை வளவன் கண்டான். ஒரு சிறுவன், தன் கையில் ஒரு பிஸ்கட் துண்டை கையில் வைத்துக்கொண்டு, தன் தாயின் உயிரற்ற உடலைப் பார்த்து அழுவதை அவர் பார்த்தார், பெயர் தெரியாத மற்றும் புதைக்கப்படாத உடல்கள் நிறைந்த வயல் வெளிகளை அவர் பார்த்தார், அங்கு அப்போது காட்டு விலங்குகள் பிணம் தின்னிகளாக சுற்றித் திரிவதைக் கண்டார்.
மணிமேகலை (6-11-66-69)
"சுடுவோ ரிடுவோர் தொடுகுழிப் படுப்போர்
தாழ்வயி னடைப்போர் தாழியிற் கவிப்போர்
இரவும் பகலும் இளிவுடன் றரியாது
வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்"
பிணங்களைச் சுடுவோரும், வாளா இட்டுப்போவோரும் [பிணத்தை அங்கு அழுகிக் கெட அல்லது சிதைவடைய எறிந்து விட்டு போவோரும்], அங்கு அடக்கம் செய்வதற்காக பிரத்யேகமாக தோண்டப்பட்ட குழியில் பிணத்தை இடுவோரும், தாழ்ந்த இடங்களில் அடைத்து வைப்போரும் தாழியினாலே கவிப்போருமாய்ப் [பிணத்தை நறுமணமூட்டி இறந்தோரை அடக்கஞ்செய்துவைக்கும் பானையுள் வைத்து அதன் வாயை மூடுவோரும்] பல்வேறுவகையாக இறுதிக் கடன்கள் செய்தார்கள் தமிழர்கள் அன்று என்று சொல்கிறது. இதில் வாளா இட்டுப்போவோரும் என்ற இரண்டாவது முறை, அதாவது இறந்த பின்னர் உடலை வெட்ட வெளியில் கிடத்தி சில நாள்கள் ஆன பிறகு விலங்குகள், பறவைகள் உண்டது போக எஞ்சிய எலும்புத்துண்டுகளை மட்டும் பொறுக்கி எடுத்து சிறிய அளவிலான மட் பாண்டத்தில் இட்டுப் புதைத்தது, வலவனுக்கு ஞாபகம் வந்தது. இங்கும் இந்த வயல் வெளியில் சிதறிக் கிடைக்கும் உடல்களுக்கும் இந்த நிலையே தான் என்று அவனின் உள்ளுணர்வு கூறியது. அப்படித்தான் அந்த புதைக்கப்படாத உடல்கள் நிறைந்த வயலும் காட்டு விலங்குகள் பிணம் தின்னிகளாக சுற்றித் திரியும் காட்சியும் வலவனுக்குத் தெரிந்தது.
வலவனுக்கு, செல்வத்திலிருந்தும் அன்பு மனைவி பிள்ளைகளிலிருந்தும் ஒன்றுமில்லாத ஒரு நிலைக்கு வீழ்ச்சி என்பது வலியும் நெகிழ்ச்சியும் நிறைந்த ஒரு பயணமாக இருந்தது. ஒரு காலத்தில் அவர்களின் செழுமைக்காக பெருமைபட்ட அவரது குடும்பம், வீடு, பண்ணை, பாதுகாப்பு எதுவும் இல்லாமல் கிராமம் கிராமமாக அலைந்து, ஒவ்வொன்றாக இழந்து இப்போது, வலவன் தன் கைகளால் கட்டிய மண் குடிசையில், அதன் சுவர்கள் பருவக்காற்றுக்கும் வெள்ளத்துக்கு இடிந்து விழக்கூடிய நிலையில், தனிமையில் திண்ணையில் குந்தி இருந்தான். அவரது ஆடம்பரமான கடந்த காலம் போரின் கொடுமையால் அழிக்கப்பட்ட தொலைதூரக் கனவு போல் அவனுக்குத் தோன்றியது.
என்றாலும் வலவன் ஒரு நம்பிக்கையில் இன்னும் ஒட்டிக்கொண்டு இருந்தார். வயல்களை உழுதல், வேலிகளைச் சரிசெய்தல் அல்லது பொருட்களை எடுத்துச் செல்வதில் என கிடைக்கும் எந்த வேலையும் செய்து, சம்பாதித்த ஒவ்வொரு நாணயத்தையும் அவரது குடும்பத்தைத் தேடுவதற்காக சேமித்தார். இரவில், அவர் நட்சத்திரங்களின் கீழ் அமர்ந்து, இன்று அருகில் இல்லாத மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஏதேதோ பேசினார்.
ஒரு நாள் மாலை, அவர் பல ஆண்டுகளுக்கு முன் எடுத்துச் சென்ற சில உடைமைகளுக்கு இடையே தனது குடும்பத்தின் பழைய புகைப்படத்தைக் கண்டார். அது மங்கி இருந்தது, ஆனால் அவர்களின் முகத்தில் புன்னகை தெளிவாக இருந்தது. அவர் அதை இதயத்தில் தொட்டு தொட்டுப் பார்த்தார், அவரது முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது. "ஒரு நாள்," அவர் கிசுகிசுத்தார், "நான் உங்கள் எல்லோரையும் கண்டுபிடிப்பேன், அல்லது குறைந்தபட்சம் உங்களுக்கு என்ன ஆனது என்பதை அறிவேன்." தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார்.
வலவனின் கதை எண்ணற்ற வன்னி வாழ் மக்களின் கதைகளில் ஒன்றாகும், இது போரினால் ஒடுக்கப்பட்ட ஒரு நிலத்தின் பிரதிபலிப்பாகும், ஆனால் அதன் மக்களின் நெகிழ்ச்சியால் இன்னும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் வலவனின் உடலுக்கு வயதாகிவிட்டாலும், அவரது இதயம் சரணடைய மறுத்தது. அன்பு, இழப்பு மற்றும் நம்பிக்கை போன்ற அவரது உணர்வுகள் ஒருபோதும் தூங்கவில்லை.
அவன் இதயத்துக்குள் "உறங்காத உணர்வுகள்" எல்லாவற்றையும் பத்திரமாக வைத்துக்கொண்டு, அவன் இன்னும் தன் மனைவி அஞ்சலை, மகன் அருண், மகள் மீராவை தேடிக்கொண்டு இந்த சின்ன மண் குடிசையில் வாழ்ந்துகொண்டு இருக்கிறான்!
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment