விஞ்ஞானத்தின் விந்தை

அறிவியல்=விஞ்ஞானம்


 


நோய்ப்பரப்பி-கரப்பான்

கரப்பான் பூச்சிகள், பாக்டீரியாக்களை, வீட்டுக் குப்பையிலும், உட்புறக் காற்றிலும் பரப்புகின்றன என்கிறது ஒரு புதிய ஆய்வு. இதனால், வீட்டில் உள்ளோருக்கு ஆஸ்துமா, சில ஒவ்வாமைகள் ஏற்படலாம்.

கோபி ஷால், மாதவி எல். ககுமனு மற்றும் ரிச்சர்ட் ஜி. சாண்டாஞ்சலோ ஆகியோர் தலைமையில், கென்டக்கி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சகரி சி. டெவ்ரீஸ் மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெஃப்ரி சீகல் ஆகியோருடன் இணைந்து இம்முடிவினை வெளியிட்டுள்ளனர்.

 

கை - சில்லு

பக்கவாதத்தால் பேச்சை இழந்தோருக்கும், கைகளை பயன்படுத்த முடியா தோருக்கும், மூளை--கணினி இடைமுகமாகச் செயல்படும், 'பாரட்ரோமிக்ஸ் கனெக்ஸஸ்' சில்லு வந்துள்ளது. இதை மூளையில் பதித்தால், நோயாளி பேச நினைப்பது கணினித் திரையில் தெரியும். கணினியையும் சிந்தனையாலேயே இயக்கலாம்.

 

குடலும் மூளையும் பேசுவதை ஒட்டு கேட்கலாம்

பல ஆண்டுகளாக, குடல் ஒரு செரிமான உறுப்பாகவே கருதப்பட்டது. இது உண்மைதானா என்பதை அறிய, கேம்பிரிட்ஜ் பல்கலை ஆய்வாளர்கள் வித்தியாசமான ஓர் ஆய்வை செய்து பார்த்தனர். அவர்கள், குடலும், மூளையும் பரஸ்பரம் பரிமாறும் சமிக்ஞைகளை நிகழ் நேரத்தில் பதிவு செய்வதற்காக, குடல் சுவர்களில் ஒரு தலைமுடி அளவே உள்ள கருவியை பொருத்தினர்.

இந்தக் கருவி, 'இரண்டாவது மூளை' என்று அழைக்கப்படும் இரைப்பைக் குழாயில் அமைந்திருக்கும் பல லட்சம் நியூரான்களைக் கொண்ட நரம்பு மண்டலத்துடன் தொடர்பு கொள்கிறது. மேலும், சமிக்ஞைகள் மற்றும் நரம்புத் துடிப்புகள் வாயிலாக இது மூளையுடன் எவ்வாறு பேசுகிறது என்பதைக் கண்காணிக்கிறது. விழித்திருக்கும் விலங்குகளிடமிருந்து, உணவு அல்லது மன அழுத்தத்தின் கீழ் தகவல்களைப் பதிவு செய்யும் திறன் நமக்குக் கிடைத்துள்ளது. இதன் பொருள், குடல்--மூளைத் தொடர்பு எவ்வாறு ஆரோக்கிய த்திற்கும் நோய்க்கும் அடிப்படையாக இருக்கிறது என்பதை நாம் இறுதியாகக் கண்டறியலாம்.

மூளை--குடல் ஆகியவற்றுக்கு இடையே நடக்கும் உரையாடலை ஒட்டுக்கேட்பதன் வாயிலாக, ஒரு மனிதரின் உடல் நலத்தை தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல, குரோன்ஸ் நோய், பெருங்குடல் அழற்சி, குடல் எரிச்சல் நோய் மற்றும் நரம்பியல் குறைபாடுகள் ஏற்படுவதற்கு முன்பே அவற்றைத் தெரிந்துகொள்ளவும், சிகிச்சை தரவும், இந்த நிகழ்நேர ஒட்டுக்கேட்டல் உதவும். மேலும், உடல் பருமன், அனோரெக்சியா எனப்படும் எடை இழப்பு நோய் போன்றவற்றுக்கு சிகிச்சைகளைக் கண்டுபிடிக்கவு ம் இந்த முறை உதவும்.

 

இதயத் திசுக்களை சீர்செய்ய

மாரடைப்பால் சேதம்அடைந்த இதயத் திசுக்களை சீர்செய்ய, 'நுண் ஊசிப் பட்டை' ஒன்றை டெக்சாஸ் பல்கலை [Texas A&M University-யின் Dr. Ke Huang தலைமையில்] உருவாக்கியுள்ளது. பட்டையை இதயத்தின் மேல் ஒட்டியதும், 'ஐ.எல்., -4' எனும் புரதத்தை திசுக்களில் பாய்ச்சிவிட்டு நுண் ஊசிகள் கரைந்துவிடும். விலங்கு சோதனைகளில், சேதமடைந்த இதயத் திசுக்கள் குணமடைந்தன.

 

முட்களால் கிழித்துக் கொல்ல..

பாக்டீரியாக்களை ஆன்டிபயாடிக் மருந்து மூலம் கொல்லாமல், முட்களால் கிழித்துக் கொல்லும் பொருளை ஸ்வீடனின் சால்மெர்ஸ் பல்கலை உருவாக்கியுள்ளது. அப்பொருள், உலோகம், கரிமம் என ஈரடுக்கால் ஆனது. அதன் மேற்பரப்பில் உள்ள முட்கள், அதன் மீது அமரும் கிருமிகளைத் துளைத்து அழிக்கின்றன. இதனால், மருந்து இல்லாமலேயே பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன.

 

மூளைக் கட்டியை அழிக்க..

மூளைக் கட்டியை அழிக்க, மூக்கு வழியாக செலுத்தப்படும் தங்கத் துகள் நானோ மருந்தை, [Washington University School of Medicine in St. Louis] வாஷிங்டன் பல்கலை உருவாக்கியுள்ளது. இது கட்டிகளை அழிப்பதோடு நீண்டகால எதிர்ப்பு சக்தியையும் தருகிறது என்பது எலிகளிடம் நடந்த சோதனையில் உறுதியாகியுள்ளது.

 

செயல்திறனை அதிகரிக்க…

லேசர்கள் மற்றும் சூரிய மின்பலகைகளின் செயல்திறனைப் பன்மடங்கு அதிகரிக்க, 'பெரோவ்ஸ்கைட்' படிகங்களை நானோ அளவில் அடுக்குகளாக அமைக்கும் முறையை ஆய்வாளர்கள் முன்னெடுத்துள்ளனர். மிக மெல்லிய இந்த அடுக்குகளை துல்லியமாக வடிவமைப்பதன் மூலம், அடுத்த தலைமுறை ஒளியியல் கருவிகளை உருவாக்கலாம்.

 

தசைகளை தூண்டி கொழுப்பை எரிக்கும் மாத்திரை

உடல் எடை குறைப்பு சிகிச்சையில் இப்போதுள்ள முறைகளை தலைகீழாக மாற்றக் கூடிய ஒரு புதிய மருந்து வந்துள்ளது. சுவீடனின் கரோலின்ஸ்கா நிலையமும் ஸ்டாக்ஹோம் பல்கலை ஆய்வாளர்களும் இதை உருவாக்கியுள்ளனர்.

தற்போது சந்தையில் பிரபலமாக உள்ள சில மருந்துகள், பசி உணர்வை கட்டுப்படுத்தி, உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதன் வாயிலாக எடையைக் குறைக்கின்றன. ஆனால், இந்த புதிய மருந்து பசியை அடக்குவதில்லை. அதற்குப் பதிலாக, எலும்போடு இணைந்துள்ள 40 சதவீத தசைகளின் வளர்சிதை மாற்றத்தைத் துாண்டிவிடுகிறது. இதனால், தசைகள் வலுவிழக்காமல் பாதுகாக்கப்படுவதுடன், உடலில் உபரியாக உள்ள கொழுப்பு மட்டும் எரிக்கப்படுகிறது.

இதன் முதற்கட்ட சோதனைகளில், உணவுக் கட்டுப்பாடின்றியே ரத்த சர்க்கரை அளவு சீராவதும், கொழுப்பு கரைவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கமான எடை குறைப்பு மருந்துகளால் ஏற்படும் தசை இழப்போ, உடல் பலவீனமோ இதில் ஏற்படுவதில்லை.

மூளை அல்லது குடலை ஏமாற்றி பசியைக் குறைப்பதற்குப் பதிலாக, உடலின் 'கலோரி எரிக்கும் இயந்திரமான' தசைகளை நேரடியாகச் செயல்பட வைப்பதே இந்த மருந்தின் உத்தி. மருத்துவப் பரிசோதனைகளில் இது வெற்றி பெற்றால், உடல் மெலிவதோடு மட்டுமல்லாமல் வலிமையாகவும் இருக்க உதவும் அரிய சிகிச்சையாக இது அமையும்.

 

 

தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment