"வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே..!”
"வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே
உயர்வை நோக்கி கனவு அமையட்டும்!
அயர்வை அகற்றி உழைத்து
துயர்வைப் போக்குங்கள்!"
" பயிர்கள் செழிக்கப் பசளையிட்டு
உயிர்கள் தழைக்க விளைச்சலைப் பெருக்குவீர்
தயிரைக் கடைந்து வெண்ணை கொடுப்பீர்
வயிறார உணவளித்தே மானுடத்தார்க்கு வாழ்வளிப்பீர்!"
"ஆடிப்பட்டம் தேடி விதைத்து
ஆலமர நிழலில் ஓய்வு காணும் உழவனே
ஆக்கம் தரும் தொழிலின் தலைவனே
ஆண்டவனின மறுவுருவம் நீரன்றோ?"
"ஏரெடுத்து பாடுபடும் மேன்மக்களே!
ஏழை எளியவர்களுக்கு புத்தாடை பொங்கல் பகிர்வீர்
ஏமாற்றம் தரா உழைப்பாளி நீர்தானே
ஏதும் சுழலாது உழவனெனும் அச்சாணி இல்லையேல்!"
💧💧💧💧💧💧💧💧💧💧
"தை மகளே வருக"
தை மகளே வருக மகிழ்வாக
கை கூப்பி உன்னை வாழ்த்துகிறேன்!
மை பூசிய அன்பு விழியாளே
வா, வந்து அருள் புரிவாயே!
கார்த்திகை மழை பெய்து பெருகி
ஆர்ப்பரித்து வெள்ளமாய்ப் பாய்ந்து ஓடி
ஊர்வலமாய் வயல் வெளி தாண்டி
மார்கழியில் அங்கே குளம் ஆனாள்!
தையில் குள நீர் தெளிந்திட
தையால் தன் கடிமனம் வேண்டி
தையில் முன்பனி நீர் ஆடி
தைத்தாடை உடுத்து தவம் முடித்தாள்!
வண்ணக் கோலம் இட்டு அவள்
விண்ணின் கதிரவனை வணங்கிப் போற்றி
கண்ணான உறவினருடன் பொங்கல் படைத்து
மண்ணின் பெருமையை உலகத்துக்கு அறிவித்தாள்!
💧💧💧💧💧💧💧💧💧💧
"உழவர் திருநாள்"
உழவர் திருநாள் பொங்கி மலரட்டும்
அழகுப் பெண்கள் கோலம் போடட்டும்!
ஆழமாக வரலாறு மனதில் பதியட்டும்
ஈழ மண்ணில் ஒற்றுமை ஓங்கட்டும்
உலகமும் சுழலாது உழவு இல்லையேல்
உண்மையைப் புரிந்தால் வாழ்வு செழிக்கும்!
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
உயர்வு கொண்ட தொழிலும் அதுவே!
உயிர்கள் வாழ உணவு தேவை
பயிர்கள் பண்ணைகள் அங்கு வேண்டும்!
குயில்கள் மயில்கள் பாடி ஆட
மையிட்ட மங்கை பொங்கட்டும் பொங்கல்!
-[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment