“மாறுவதெப்போ?
தீருவதெப்போ?”
மனிதன் மனிதனை
மனமறிந்து நோக்காத
கொடுங் காலம் இது எனக்
கண்ணீர் மொழிகிறது பூமி.
வானம் பொழியும் மழையெல்லாம்
வயல்வரை வந்து நின்றாலும்,
வியர்வை சிந்தும் உழவனுக்கு
விளைச்சல் சேர்வதில்லை.
நிமிர்ந்து நிற்கும் கதிரெல்லாம்
தரையைத் தொழுது வணங்க,
பதரின் பேரொலி மட்டும்
பரப்பெங்கும் முழங்குகிறது.
அறிவு உள்ளவன்
அமைதியின் ஆழத்தில் அடங்க,
ஆணவம் கொண்டவன்
ஆட்சியின் அரியணை ஏறினான்.
அன்னம் விளைத்த கை
பசியோடு இருக்க,
அதைப் பகிராதவன்
அரசனாய் மதிக்கப்படுகிறான்.
அடிபணிதல் வீரமல்ல,
அஞ்சுதல் நெறியுமல்ல;
பூனையைப் புலியென எண்ணி
பயந்து சுருங்குதல் தவறு.
தம்பி பயலே,
தருமம் பேசும் நாவே
தீயைக் கக்கும் வாளைவிட
வல்லமை உடையது.
மனிதம் மனிதனை
விழுங்கும் வழக்கம் ஒழிந்து,
மனிதம் மனிதனை
மீட்கும் நாள் வரும்வரை—
“மாறுவதெப்போ?
தீருவதெப்போ?”
என்ற நம்ம கவலை
காலத்தோடு கலந்தே
கத்திக் கொண்டிருக்கும்.
-மனுவேந்தன் செல்லத்துரை
"எது தான் சரி...?"[அந்தாதிக் கவிதை]
"எது தான் சரி புரிகிறதா
புரிந்து தான் என்ன பயன்?
பயன் அற்ற உலக வாழ்வில்
வாழ்வது ஒரு கேடு இல்லையா?
இல்லாத ஒன்றுக்கு தேடி அலையும்
அலை மோதும் நெஞ்சு உனக்கா?
உனக்காக முதலில் வாழப் பழகி
பழகிய உறவை அலசிப் பார்ப்பாயா?
பார்க்கும் பார்வையில் எதைக் கண்டாய்
கண்டத்தில் எது தான் சரி?"
"பனிப்பொழிவு"
"பனிப்பொழிவு பெய்கிறது பாலாய்ப் படர்கிறது
பகலோன் வெப்பம் குளிரால் மூடுகிறது
பச்சை மரமோ வெண்ணிற ஆடையில்
பசும்புல் தரையோ வழுக்கி வீழ்த்துகிறது!"
"பருவப் பெண் கனவு காண்கிறாள்
படுக்கையை விட்டு எழும்ப மறுக்கிறாள்
பஞ்சு பஞ்சாய் குளிர்த்துளி விழுகிறது
பரந்த வெளிகளோ பளிங்காய்த் தெரிகிறது!"
"பணம் படுத்தும் பாடு"
"பகட்டு வாழ்வில் பற்றுக் கொண்டு
படித்த அறிவை மூடி வைத்து
பண்பு மறந்த செயல்கள் மூலம்
பணம் படுத்தும் பாடு தெரியுமா?"
"நாணயம் கொடுத்தாலே
ஆண்டவனுக்கும் பூசை
நாணும் கோதையும் பாய் விரிப்பாள்!
நாக்கு கூட பொய் உரைக்கும்
நாடகம் ஆடும் பதவிகள் சேர்க்கவே!"
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி,
யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment