கண்டிப்பாக இருங்கள்

(உளவியல் /Psychology)

ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கும்போது சிந்தித்துப் பார்த்தால்நாம் எத்தனை நேரம் பயனுள்ளதாகச் செலவழித்திருக்கிறோம், எவ்வளவு வீணடித்திருக்கிறோம்என்று புரியும்.

 

ராமசாமிபக்கத்து வீட்டில் இருப்பவர்- மனுஷன் பேப்பர் இரவல் கேட்டுத்தான் வருவார். ஆனால் லேசில் போகமாட்டார், உலக விஷயம், சினிமா கிசு கிசு என்று விடாமல் துரத்தியடிப்பார் "வருகிறேன்; போயிட்டு வரட்டுமா?" என்று வாசற்படிவரை சென்று நமக்கு நம்பிக்கை அளித்துவிட்டு, "அப்புறம், ஒன்று சொல்ல மறந்துவிட்டேனே…" என்று மறுபடி வருவார். அவரிடம்எனக்கு வேலையிருக்கிறது; அப்புறம் வருகிறீர்களா?’ என்று சொல்ல முடியாமல் ஒரு தாட்சண்யம், தர்மசங்கடம். இந்த மாதிரி வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி நம் நேரத்தை வீணடிக்க என்றே பலர் காத்திருப்பார்கள்.

 

ஒரு மானேஜர் தன் மேசைக்கு முன்னால் ஒரு வாசகம் எழுதி வைத்திருப்பார், ‘உங்களுக்கு ஏதும் வேலை இல்லையென்றால் அதை இங்கே செய்யாதீர்கள்என்று. எல்லா நேரத்திலும் தாட்சண்யம் பார்க்க முடியாது. அதே நேரத்தில், வருபவரிடம் கண்டிப்பாக, "நீங்கள் வெளியே செல்கிறீர்களா?" என்றும் சொல்ல முடியாது. இந்த மாதிரி நிலைமைகளைச் சமாளிப்பதற்குக் கண்டிப்பும் வேண்டும்அதே சமயத்தில் எதிரிலிருப்பவர்கள் மனதைப் புண்படுத்தாமலும் இருக்க வேண்டும். கடிதோச்சி மெல்ல எறிதல்வார்த்தைகள் கடுமையானதாகத் தோன்றினாலும் அவற்றைச் சொல்லும் விதம் பக்குவமாக இருக்க வேண்டும்.

 

இப்படித் தேவையில்லாத அரட்டைப் பேச்சினால் கவனிக்க வேண்டிய முக்கியமான அலுவல்கள் தாமதப்படுகின்றன. நாம் விரும்பும் செயலைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடிவதில்லை.

 

எப்படி இப்படிப்பட்ட ஆசாமிகளைத் தவிர்ப்பது?

 

ஒரு அதிகாரி, தன்னிடம் பேச வந்திருப்பவர் தேவைக்குமேல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் தனது இருக்கையிலிருந்து எழுந்து, "நான் உங்களை லிஃப்ட் வரை கொண்டுவந்து விடுகிறேன். இப்போது நான் அந்த வழியாகத்தான் போகிறேன்" என்று சொல்லி வந்தவரை வெளியே அனுப்புவார்.

 

ஒரு விற்பனை அதிகாரி தன் பணியாளரிடம் இந்த மாதிரி சொல்லி வைத்திருந்தார்: "யாராவது என்னைச் சந்திக்க வந்து பத்து நிமிஷத்துக்குமேல் இருந்தால் நீ வந்து, ‘மானேஜர் உங்களை அவசரமாகக் கூப்பிடுகிறார்என்று சொல்!" என்று. அவருக்குத் தெரியும், வந்திருப்பவர் பத்து நிமிஷத்தில் சொல்ல வேன்டியதைச் சொல்ல முடியவில்லையென்றால் அதற்குப் பிறகு பேசி நேரத்தை வீணடிப்பதில் பயனில்லை என்று.

 

தனது தொழிலில் வெற்றி அடைந்த ஒரு நிறுவனர், யார் வந்தாலும் தனது அறைக் கதவின் வாசலிலேயே சந்திப்பார் -எங்கேயோ கிளம்பிக் கொண்டிருப்பதுபோல- வருபவரிடம் "பேசிக் கொண்டே போகலாமே" என்று சொல்லி, குறிப்பிட்ட ஒரு பிரிவுக்கு வந்த பிறகு அங்கே செல்லப்போவதுபோல் பாவனை செய்து "மிகவும் மகிழ்ச்சி! அப்புறம் சந்திக்கலாம்" என்று சொல்லிக் கைகுலுக்கி அனுப்பிவிடுவார்.

 

இதேபோல், வீட்டிலும் ஒரு பெண்மணி இந்த யுத்தியைக் கையாளுவார். யாராவது கதவைத் தட்டியவுடன் கையில் கைப்பையுடன் சென்று கதவைத் திறப்பார். வருபவர் வேண்டியவராக இருந்தால் "இப்போதுதான் வெளியே சென்றுவிட்டுத் திரும்பி வந்தேன்" என்பார். அவர் போரடிப்பவராக இருந்தால், "நான் வெளியில் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்நீங்கள் வந்து விட்டீர்கள்" என்று சொல்லுவார். எப்போது கிளம்பலாம் என்று தெரியாமல் அடுத்தவரது நேரத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்களைச் சமாளிப்பது எப்படி என்று எல்மர்வீலர் சொல்கிறார். குறிப்பிட்ட ஆசாமியிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:

 

"இப்போது நேரம் என்னவாயிற்று?"

 

"காலையில் வேலைக்கு வீட்டிலிருந்து செல்வதற்கு எவ்வளவு நேரமாகும்?"

 

"நீங்கள் எப்போது காலையில் எழுந்திருப்பீர்கள்?" போன்ற கேள்விகளைக் கேளுங்கள். அவரே புரிந்து கொள்வார், தன்னை எதிராளி வெளியே கிளப்புகிறார் என்று.

 

இப்படியும் சொல்லலாம், "இப்போது கிளம்பினால்தான் நீங்கள் 9 மணி பஸ்சைப் பிடிக்க முடியும். பத்து மணிக்குப் பிறகு கிளம்பினால் உங்களுக்குக் களைப்பாக இருக்காதா?" என்று. அல்லது இப்படியும் கேட்கலாம், "நீங்கள் கிளம்புவதற்கு முன்னால் ஒரு காஃபி சாப்பிடுகிறீர்களா?" என்று. எதிரிலிருப்பவர் புரிந்து கொள்வார்.

 

இல்லை, என்னால் முடியாதுஎன்று உறுதியாகச் சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள். எதிராளி ஏதாவது நினைத்துக் கொள்ளப் போகிறார்களே என்பதற்காக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தாமல்ஆமாம் சாமிபோடாதீர்கள். "அப்போ, நாளைக்குப் பத்து மணிக்குச் சந்திக்கலாமா?" என்று ஒருவர் கேட்டால், உங்களால் அந்த நேரத்தில் முடியாது என்று கருதினால் பளிச்சென்று சொல்லிவிடுங்கள். சரி என்று தலை ஆட்டிவிட்டு அப்புறம் போகாமல் இருப்பதைவிட அப்போதே மறுப்பது உத்தமம்! கெட்டிக்கார நிர்வாகிகள், "தெரியவில்லை, எனது நாட்குறிப்பைப் பார்த்துவிட்டு நாளை உறுதி செய்கிறேன்" என்று சொல்லுவார்கள்.

 

முடியாது என்று சொல்ல வேண்டுமானால் அதனைத் தீர்மானமாக அழுத்திச் சொல்லுங்கள்! ஆனால், அடுத்தவரது மனம் புண்படாமல் சாமர்த்தியமாகச் சொல்ல வேண்டும். சாமர்த்தியமானவர்கள் தங்கள் மறுத்தல்களைத் தெரிவிக்கும்போது கூட எதிரிலிருப்பவருக்கு அவர் நமக்காகச் செய்கிறார் என்பதுபோல எண்ணம் ஏற்படும்படிப் பேசுவார்கள். ‘மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்துஎன வள்ளுவர் கூறுகிறார். உங்களால் ஒரு வேலையைச் செய்ய முடியாது என்றால்முடியாதுஎன்று சொல்லத் தயங்காதீர்கள். முடியும்; ஆனால் சற்று நேரமாகும் என்றால், எனக்கு மிகவும் ஆசையாகத்தானிருக்கிறது. ஆனால், உடனே செய்ய நேரமில்லையே! அடுத்த முறை நிச்சயம் செய்கிறேன்" என்று, சொல்பவர் மனம் கோணாமல் சொல்லப் பழகுங்கள்.

 

⦕⦖நன்றிதேவியின் கண்மணி.

0 comments:

Post a Comment