பகவத் கீதை (அ)தர்ம நூலா?


மகாபாரதத்தில், பரசுராமரின் மகனான வியாசருக்கு இரு வேறு மனைவியர்களினூடாக திருதராட்டினர் என்னும் மூத்த மகனும், பாண்டு என்ற இளைய மகனும் பிறந்தார்கள். திருதராட்டினர், ஒர் இலட்சம் யானைகளுக்கு ஈடான பலத்தினைக் கொண்டிருந்தாலும், அரச உரிமை மூத்தவரான இவருக்கே கிடைக்கவேண்டும் என்று இருந்தாலும், பிறப்பிலிருந்தே கண் பார்வை அற்றவராக ஆனபடியால், கற்றோரின் ஆலோசனையின்படி, அவரின் விருப்பம் இன்றியே அரச பரிபாலனத்தை, அவரின் ஒன்று விட்ட தம்பியாகிய பாண்டுவிடம் ஒப்படைத்தனர். இவர் தற்காலிகமாக ஆலோசகராகவே இருந்து வந்தார்.

இப்படி இருக்கும்போது,  திருதராட்டினருக்கு இவர் மனைவி - கண்கள் மூடிக் கட்டப்பட்டிருந்தும் - மூலம் துரியோதனன் முதலாக 100+1 பிள்ளைகள் பிறந்தனர்.  அதே நேரம் பாண்டுவின் மனைவியர் இருவருக்கும் (பாண்டுவுக்கு அல்ல!) ஆறு பிள்ளைகள் பிறந்தனர்.  பாண்டுவுக்கு, சாபம் ஒன்றினால் மக்களைப் பெறும் தன்மை இல்லாது போனபடியால்,  இவரின் மனைவி குந்தி, தனக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரத்தை உபயோகித்து, (முதலில் இரகசியமாக சூரியனின் மூலம் கர்ணன்),  இயமன் மூலம் தர்மன், வாயு மூலம் வீமன்,  இந்திரன் மூலம் அர்ச்சுனன், மற்றும் இரண்டாவது மனைவி மாதுரியால்,  அஸ்வினி குமார இரட்டைக் கடவுளின்மூலம் நகுலன் - சகாதேவன் இரடடையர்கள் ஆகியோர் பிறந்தனர்.

சரி இப்போது விடயத்திற்கு வருவோம்:

கிருஷ்ணர் பகவத் கீதையில் என்ன சொன்னார்? -  "உன்கடமையைச் செய் பலனை எதிர் பாராதே" என்று. முதலில், அந்த மகாபாரதப் போர் உண்மையில் நியாயப் படுத்தக் கூடிய ஒன்றா என்று ஆராய வேண்டும்.

1. வேறு சில மதங்கள், தங்கள் கடவுள்களை வணங்காதவர்களை மட்டும்தான் கொன்றொழிக்குமாறு கூறுகின்றன; தம் மதங்களைச் சார்ந்தவர்களுடன் நட்பாய் இருக்கக் கட்டளை இடுகின்றன.  ஆனால், இந்தப் புனித நூலோ, ஒரே மதத்தினரைக் கொன்றொழிக்குமாறு வற்புறுத்துகிறது. அதுமட்டுமல்ல,  உனது வணக்கத்துக்கு உரிய குருமார்கள், ரிஷிகள், பெரியப்பன்/சின்னப்பன்மார்கள், ஒன்று விட்ட சகோதரங்கள், மைத்துனர்கள், பெறாமகன்கள், நண்பர்கள், அப்பாவிப் பொது மக்கள் என்று யாரையும் பார்க்காது, உனக்கு அரசுரிமை கிடைக்கவேண்டும் என்றால் எல்லோரையும் கொன்று ஒழி என்று உபதேசிக்கிறது. எத்தனை பெண்கள் விதவையானாலும் பரவாய் இல்லை, உனக்கு உன் அரச முடிதான் முக்கியம் என்று தூபம் போடுகிறது.

2. இவர்களை ஏன் போர் புரியச் சொல்கிறார்? இழந்த அரசைத் திரும்ப எடுக்கவாம். யார் அரசை யார் எடுப்பதாம்?

அரசுடைமைச் சட்டத்தின்படி, அரசனின் மூத்த மகனுக்கும், தொடர்ந்து அவனின் மூத்த மகனுக்கும் என்றுதான் வழிவழியாக, பரம்பரை, பரம்பரையாக அரச பதவிக்கு முடி சூட்டப்படும். என்றால், திருதராட்டினனின் மூத்த மகனாகிய துரியோதரனுக்குத்தானே அரசாளும் உரிமை வழங்கப்பட வேண்டும்? அவன் ஒரு குருடன் இல்லையே? குருடனாய் இருந்திருந்தாலும் அவனுடைய தம்பியை (பாண்டுவை ஆக்கியது போல) அரசனாக்கியிருக்கலாமே?  ஏதோ, நாட்டு நலனுக்காக, திருதராட்டினன் விட்டுக்கொடுத்த ஒரே காரணத்துக்காக, அவனின் வாரிசாகிய துரியோதனன் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்?

3. சரி, பாண்டுவின் மூத்த பிள்ளைக்குத்தான் அரசுரிமை கொடுக்கப்படவேண்டும் என்றே வைத்துக்கொண்டால்,  தயவு செய்து, தயவு செய்து சொல்லுங்கள் இந்த ஐந்து/ஆறு பேர்களில் யார்தான் பாண்டுவின் பிள்ளை?  ஒருவருமே இல்லையே! அவர்களின் தகப்பன்மார்கள் ஆறு வெவ்வேறு கடவுள்கள்தானே? பாண்டு இல்லையே? அப்படி இருக்க எப்படித்தான் ஐயா, சட்ட்டபூர்வமான பிறப்புகள் இல்லாத இவர்கள், இளவரசன் என்ற சொல்லுக்குத் தகுதியானவர்கள்?

அப்படித்தான், 'பாண்டுவின்' மூத்த 'மகன்' என்று பார்த்தால் அது கர்ணன்தானே? அவனுக்குத்தான் துரியோதனனன் ஏற்கனவே ஓர் இராச்சியம் கொடுத்துவிட்டானே! அப்போ, ஏன் இந்தக் கொலை வெறி?

எதோ, கர்ணன் செய்ததுபோல துரியோதனனுக்கு விசுவாசமாய் இருந்திருந்தால் இவர்களுக்கும் அவன் சிறு, சிறு ஊர்களைத் தந்திருப்பான்! இவர்களோ தொடக்கத்தில் இருந்து அவனை விரோதியாய்ப் பார்கிறார்களே!

இவர்கள்தான், கிருஷ்ணனின் துர்ப்போதனையால், அரசாளும் பேராசையினால், அப்பாவிகள் அனைவரும் கொன்றொழித்தார்கள்.

மனச்சாட்சிக்கு ஒவ்வாத, நியாயமற்ற, கொடூரத்தனமான கொலைகளைச் செய்யுமாறு  (கடவுள்) கிருஷ்ணன், அருச்சுனனை மூளைச் சலவை செய்து பயமுறுத்தி அனுப்பி வைக்கிறார்.

இந்த மகா நூல், ஒரு தீவிர வாதத்தையும், அடிமைத்தனத்தையும், சாதி பாகுபாடுகளையும் ஆதரித்துப்  போதிக்கும் ஒரு சாசனம்.

இதில், மனுஷனுக்கு விளங்காத தத்துவங்கள் பல இருப்பதாக ஆன்மிக வாதிகள் பறை சாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

அப்படிச் சொன்னால்தான் அவர்களை நாலு பேர் 'அறிவாளிகள்' என்று நினைத்துக் கொள்வார்கள்.

மனிதனுக்கு விளங்காதவை இருந்துதான் என்ன, தொலைந்து போனால்தான் என்ன?

இப்படியான வன்முறைதன்னை ஊக்குவிக்கும் இந்த நூல் உண்மையில் ஒரு புனிதமான தர்ம நூலா?

நீங்களே சொல்லுங்கள்!

 

:செ.சந்திரகாசன்

0 comments:

Post a Comment