உங்கள் உடல் வலிமையை துல்லியமாகக் காட்டும் கைகளின் பிடிதிறன்

நம் கைகளின் பிடிதிறன் (Grip) நம் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பிரதிபலிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பல விஞ்ஞான ஆய்வுகள், கைப்பிடியின் வலிமை இழப்பை உடல் வலிமையுடன் தொடர்புபடுத்தியுள்ளன. உங்கள் கைகளில் ஒன்றை அழுத்தும் பந்து போன்ற ஒரு பொருளை நீங்கள் அழுத்தும் சக்தி, எடுத்துக்காட்டாக - உடலின் வயதான முடுக்கத்தைக் காட்டுகிறது.

 

2020 ஆம் ஆண்டு ஐரோப்பிய மருத்துவ ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, 75 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளின் அதிகபட்ச பிடியின் வலிமையை பகுப்பாய்வு செய்ததுடன் அந்த வலிமையின் பலவீனத்திற்கும் சர்கோபீனியாவின் இருப்புக்கும் நேரடி உறவு இருந்ததைக் கண்டறிந்தது. இது ஒரு வகையான வயது சார்ந்த தசைச் சிதைவு ஆகும்.

 

மற்ற ஆய்வுகள், கைப் பிடியின் வலிமையை இழப்பது முதுமையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை மட்டும் அல்ல, எந்த வயதிலும் பிரதிபலிக்கிறது என்றும், தங்கள் கைகளில் குறைந்தபட்ச வலிமையை எட்டாதவர்கள் இதயம் மற்றும் சுவாசம் உட்பட அனைத்து வகையான சிக்கல்களின் அபாயத்தைக் கொண்டிருக்கலாம் என்றும் காட்டுகின்றன.

 

அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் பேராசிரியர் மார்க் பீட்டர்சன் கூறுகையில், "நாட்பட்ட நோய்கள் மற்றும் இறப்புக்கான உயிரியல் குறியீடாக கைப் பிடியின் வலிமையைக் கொண்டு காட்டப்படும் பல ஆய்வுகள் எங்களிடம் உள்ளன,” என்றார்.

 

"உடல் எவ்வளவு வலிமையானது என்பதற்கான பொதுவான குறிகாட்டியாக கைகளின் வலிமை விளங்குகிறது. ஒருவரின் கைப் பிடியில் வலிமை இருந்தால், அவர் பெரும்பாலும் கால்கள், கைகள் மற்றும் வயிற்றுப் பகுதியில் கூட வலிமையைக் கொண்டிருப்பார்," என்று நிபுணர் கூறுகிறார்.

 

பிடியின் வலிமையை அளவிட்டால் தெரியும்

ஒரு நபரின் அதிகபட்ச பிடியின் வலிமையைக் கண்டறிய, மருத்துவர்கள் டைனமோமீட்டரைப் பயன்படுத்துகின்றனர், இது நோயாளி மூன்று தனித்தனி சந்தர்ப்பங்களில் அதிகபட்ச சக்தியுடன் அழுத்த வேண்டும். மூன்று முடிவுகளிலிருந்து பின்னர் சராசரியாக ஒரு முடிவை எட்ட முடியும்.

 

ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் 2022 ஆய்வின்படி, அவர்களின் வயது, பாலினம் மற்றும் உயரத்திற்கு சராசரியை விட அதிகபட்ச பிடியின் வலிமை குறைவாக உள்ளவர்கள் இறப்புக்கான அதிக ஆபத்தை கொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

 

"ஒப்பிடக்கூடிய மக்கள்தொகையின் சராசரிக்குக் கீழே அதிகபட்ச பிடியின் வலிமை இருந்தால் அது மரணத்திற்கு வழிவகுக்கும் சுகாதார நிலைமைகளைக் குறிக்கிறது என்று முடிவுகள் காட்டுகின்றன" என்று ஆஸ்திரியாவில் உள்ள ஒரு மையமான அப்ளைடு சிஸ்டம்ஸ் அனாலிசிஸின் சர்வதேச நிறுவனம் கூறுகிறது.

 

கைகளில் வலிமை இழப்புடன் தொடர்புடைய காரணிகளில் ஒன்று சர்கோபீனியா ஆகும். இது தசைத் தொகுப்புகளின் முற்போக்கான மற்றும் பொதுவான இழப்பு என்பதுடன் வயதான செயல்முறையுடன் தொடர்புடைய தசை செயல்பாடு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

 

வயதான காலத்தில் தசைத் தொகுப்பின் வலிமையை இழப்பது இயல்பானது என்றாலும், பிரிட்டனின் உள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் உட்பட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கும் வாழ்க்கை முறை மற்றும் அதிக எடை போன்ற காரணிகள் வயது ஆகும் போது சர்கோபீனியா பாதிப்பின் ஆபத்தை அதிகரிக்கும் என நமக்குக் காட்டுகின்றன.

 

பேராசிரியர் பீட்டர்சன் இது குறித்துப் பேசிய போது, "அதனால்தான் பிடிப்பு என்பது ஒரு நல்ல அளவீட்டுக் கருவியாகும். ஏனென்றால் குறைந்த பிடிப்பு வலிமை கொண்ட ஒருவரைக் கண்டால், அவர்களுக்கு குறைந்த உடல் வலிமை உள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். மேலும் நடத்தைகளை மாற்றுவதன் மூலம் உடல் வலிமையை அதிகரிக்கவும் முடியும்," என்றார்.

 

கைகளின் பிடிதிறனுக்கும் உடலின் பிற தசைகளுக்கும் என்ன தொடர்பு?

வயதானவர்களின் அதிகபட்ச கைப் பிடியின் வலிமைக்கும் அவர்களின் கால்கள் மற்றும் வயிற்று தசைகளின் வலிமைக்கும் இடையே ஒரு உறவை விஞ்ஞானிகள் நிரூபிக்கமுடிந்தது.

 

"நீங்கள் வயதாகும்போது, ​​​​உங்களுக்கு மிகவும் விருப்பமான தசைகள் உடலின் கீழ் பகுதியின் தசைகளாகும்" என்று பிரிட்டனில் உள்ள நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் வாழ்க்கை முறை மற்றும் நல்வாழ்வு பிரச்சினைகள் குறித்த இணை ஆராய்ச்சியாளர் டாக்டர் கிறிஸ்டோபர் ஹர்ஸ்ட் பிபிசி முண்டோவிடம் கூறினார். "அவை நாற்காலியில் இருந்து எழுந்து நடக்க, படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு நீங்கள் பயன்படுத்தும் தசைகள்."

 

கைகளுக்கும் உடலின் மற்ற தசைகளுக்கும் இடையிலான இந்த நேரடி உறவுக்கு நமக்கு பல நேரங்களில் உதவியாக இருக்கிறது. அதிகபட்ச கைப் பிடியின் வலிமையை அளவிடுவது தசை வலிமை இழப்பு தொடர்பான அபாயங்களை அடையாளம் காண எளிதான, மலிவான மற்றும் பயனுள்ள வழியாகும்.

 

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தில் இருக்கும் முதியோர் மருத்துவக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், ஒரு நீளமான ஆய்வில், பலவீனமான பிடியின் வலிமை வயதான ஆண்கள் மற்றும் பருமனான பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களைக் குறிக்கும் வலுவான ஆதாரமாக உள்ளது என்று கண்டறிந்தனர்.

 

உடலின் இழப்பீட்டு வழிமுறைகள் காரணமாக, தேவையான சக்தியை உருவாக்காத ஒரு தசையின் செயல்பாட்டுக்கு வெவ்வேறு தசைகள் உதவுகின்றன. கால் தசைகள் போன்ற மற்ற தசைகளுக்கு ஏற்கெனவே சமிக்ஞைகள் கிடைத்துக்கொண்டிருக்கும் போது மட்டுமே கைப் பிடியின் வலிமையின் இழப்பு தெளிவாகத் தெரியும் என்று ஹர்ஸ்ட் கூறுகிறார்.

 

அதனால்தான் கைப் பிடியின் வலிமையை அளவிடுவது தொடக்ககால நோயறிதல் கருவியாக மாறும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் இது மருத்துவமனைகளில் மிக எளிதாகக் கடைபிடிக்கப்படும் வழிமுறையாக உள்ளது. இதனால் மற்றும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த உதவமுடியும்.

 

வலிமையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

வியன்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், "குறைந்த கைப்பிடி வலிமை, இயலாமையின் வெளிப்பாடாக இருக்கும். ஏனெனில் இது குறைந்த தசை வலிமையை பிரதிபலிக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உடற்பயிற்சி ஆகியவை நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க அல்லது நீண்ட காலத்திற்கு மேம்படுத்த சிறந்த வழிகளாக உள்ளன," என்கின்றனர்.

 

எந்த விதமான முன் பயிற்சியும் இல்லாமல் மக்களுக்கு உதவுவதில் அர்ப்பணிப்புடன் இருக்கும் பீட்டர்சன் கூறுகையில், "உங்களுக்கு நிறைய செயல்பாடுகள் தேவை என்பது கூட கட்டாயம் இல்லை. எப்போதும் உட்கார்ந்திருக்காமல் ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டிருந்தாலே போதுமானது என்பதை நாங்கள் அறிவோம்,” என்றார்.

 

கைப் பிடியை மட்டுமல்ல, முழு உடலையும் வலுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும் சில பயிற்சிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

 

"ஒரு கம்பியைப் பிடித்துக்கொண்டு தொங்குவதும், முடிந்தால், புல்-அப்களை செய்வது போன்ற பயிற்சிகள் நல்ல உதவியாக இருக்கும். அதாவது, ஒரு கம்பியைப் பிடித்துக்கொண்டு தொங்குவது, தொங்கும்போது அப்படியே உடலை மேலே தூக்குவது - உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் செய்யக்கூடிய இரண்டு சிறந்த பயிற்சிகள்," என்று பீட்டர்சன் விளக்குகிறார். இந்த பயிற்சிகள் உடலின் பெரும்பாலான முக்கிய தசைகளுக்கு வலுசேர்க்கின்றன.

 

பீட்டர்சன் பாரம்பரிய லஞ்சஸ் பயிற்சியைப் பரிந்துரைக்கிறார். ஆனால் இரு கைகளிலும் எடையைப் பிடித்துக் கொள்ள வேண்டும்: அதாவது, உங்கள் இடுப்பு மற்றும் தோள்களுடன் உங்கள் கால்களை இணைத்து நிற்கவும். பின்னர், உங்கள் உடலுக்கு அடுத்ததாக ஒவ்வொரு கையிலும் ஒரு எடையைப் பிடித்து, முன்னோக்கி ஒரு நீண்ட அடியை வைத்து, உங்கள் முதுகை நிமிர்ந்து நிற்கவும். அப்போது உங்கள் வயிற்றுத் தசைகள் சுருங்கியிருக்கும்.

"உங்கள் கைகளில் சிறிது எடையைச் சேர்த்தால் அது மேலும் உதவியாக இருக்கும். ஏனெனில் இது இடுப்புக்கு ஒரு பயனுள்ள பயிற்சியாகும். இதில் ட்ரேபீசியஸ் (கழுத்தின் பின்பகுதியில் உள்ள தசை) அடங்கும். ஏனெனில் நீங்கள் உங்கள் தோள்களையும், உடலையும் நிமிர்ந்து வைத்திருக்க வேண்டும்."

 

ஹர்ஸ்ட் கூறும் முக்கியமான விஷயம் என்னவென்றால், மக்கள் சில வகையான தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்பதுதான்.

 

"எங்கள் மிக முக்கியமான செய்தி என்னவென்றால், மக்கள் தங்களால் இயன்றவரை எதிர்ப்பு உடல் பயிற்சியைத் தொடங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்தப் பயிற்சியை எப்போதும், எந்த வயதிலும் தொடங்கலாம். அதிக வயதாகிவிட்டதே, இனி இது போன்ற பயிற்சிகள் பயன் அளிக்குமா என்று சிந்திப்பதைவிட முடிந்த அளவு உடனடியாக இந்தப் பயிற்சியைத் தொடங்கவேண்டும்."

 

"இதில் சிறந்த விஷயம் என்னவென்றால், ஒருவேளை 70 அல்லது 80 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தாலும், சிறிய அளவில் இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உங்களுக்கு மிகுந்த பயன்கள் கிடைக்கும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

நன்றி:ரஃபேல் அபுசைபே/ பிபிசி தமிழ்


0 comments:

Post a Comment