குறைந்த அளவு மதுபானம் அருந்துவது உடல்நலத்திற்கு நல்லதா?


ஒவ்வொரு நாளும் ஒரு குவளை ஒயின் குடிப்பது ஆரோக்கியமானது என நினைத்துகொண்டு குடிப்பவர்களா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு ஒரு தீய செய்தி.

ஆல்கஹால் குடிப்பதில் பாதுகாப்பான நிலை என்று எதுவுமே இல்லை என்பதை காட்டுகின்ற முந்தைய ஆய்வை லான்செட்டில் வெளியாகியுள்ள உலக அளவில் நடத்தப்பட்ட பெரியதொரு புதிய ஆய்வு உறுதி செய்துள்ளது.

 

மிதமான அளவு மது குடிப்பதால் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கலாம் என்பதை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், புற்றுநோய் மற்றும் பிற நோய்கள் வருகின்ற ஆபத்து இத்தகைய பாதுகாப்பை விட அதிகமாக இருப்பதை இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

இந்த ஆய்வில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ள பல அம்சங்களால், இது வரை நடத்தப்பட்ட ஆய்வுகளில், இந்த ஆய்வின் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது என்று இந்த ஆய்வின் ஆசிரியர் தெரிவித்துள்ளார்,

 

மிதமான மது அருந்துதலால் ஆபத்து

நோய்களால் உலக நாடுகளில் ஏற்படும் சுமை பற்றி ஒருங்கிணைந்த முறையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 1990 முதல் 2016 வரை 195 நாடுகளில் பயன்படுத்தப்பட்ட ஆல்ஹகால் நிலைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.

 

15 முதல் 95 வயது வரையானவர்களின் தரவுகளை பகுத்தாய்வு செய்தபோது, மது குடிக்காதவர்களை, ஒரு நாளைக்கு ஒரு முறை (10 கிராம் ஆல்கஹால்) மது அருந்துபேவர்களோடு ஆய்வாளர்கள் ஒப்பிட்டு பார்த்தனர்.

 

மது குடிக்காத ஒரு லட்சம் பேரில் 914 பேருக்கு புற்றுநோய் அல்லது உட்காயம் போன்ற ஆல்கஹாலால் உருவாகின்ற உடல்நல பிரச்சனைகள் தோன்றியதை ஆய்வாளர்கள் கண்டனர்.

 

ஒரு நாளுக்கு ஒரு முறை (10 கிராம் ஆல்கஹால்) மது குடிப்பவர்களில் இத்தகைய உடல்நல பிரச்சனைகளை பெற்று கூடுதலாக 4 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

 

ஒரு நாளைக்கு இரண்டு முறை (20 கிராம் ஆல்கஹால்) மது குடித்தவர்களில் கூடுதலாக 63 பேர் உடல்நல பாதிப்புக்களை ஓராண்டில் பெற தொடங்கியிருந்தனர். ஒரு நாளைக்கு 5 முறை (50 கிராம் ஆல்கஹால்) மது குடித்தவர்களில் கூடுதலாக 338 பேருக்கு உடல் நல பிரச்சனைகள் தோன்றியிருந்தன.

 

பொது மருத்துவராக பணியாற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் ஆய்வாளரும், இந்த ஆய்வை மேற்கொண்ட ஆசிரியர்களில் ஒருவருமான பேராசிரியர் சோனியா சாசானா இது பற்றி கருத்து தெரிவிக்கையில், "ஒரு நாளைக்கு ஒரு முறை மது அருந்தினாலும், சிறியதொரு ஆபத்து அதிகரிப்பு காணப்படுகிறது. பிரிட்டன் மக்கள்தொகையோடு கணக்கிடும்போது, இதுவொரு பெரிய எண்ணிக்கை. இதில் பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே குடிப்பவர்கள் அல்ல" என்று தெரிவித்திருக்கிறார்.

 

உடல்நலம் அளவீடு மற்றும் திறனாய்வு நிறுவனத்தை சேர்ந்த இந்த ஆய்வின் முன்னிலை ஆசிரியரான மேக்ஸ் கிரிஸ்வோல்டு, "சில சூழ்நிலைகளில் ஆல்கஹாலின் பாதுகாப்பு திறனை முந்தைய ஆய்வுகள் கண்டறிந்திருந்தன. ஆனால், எந்த அளவு ஆல்கஹால் குடித்தாலும், ஆல்கஹாலோடு தொடர்புடைய ஒருங்கிணைந்த உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதை கண்டறிந்துள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார்.

 

"ஆல்கஹால் குடிப்பதற்கும், புற்றுநோய், உட்புண்கள் மற்றும் தொற்று நோய்களுக்கும் இடையிலான உறுதியான தொடர்பு, ஆல்கஹால் இதய நோய்க்கு வழங்குகின்ற பாதுகாப்பு பயன்களை மிஞ்சிவிடுகின்றன என்பதை எமது ஆய்வில் கண்டறிந்துள்ளோம்" என்று அவர் கூறியுள்ளார்,

 

"ஒரு நாளைக்கு ஒரு முறை என்று ஆல்கஹாலை கொஞ்சமாக குடிக்கும்போது சற்று குறைவாக இருக்கும் உடல்நல ஆபத்துகள், மக்கள் அந்த ஆல்கஹால் அளவை அதிகரிக்கும்போது மேலும் விரைவாக அதிகரிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

2016ம் ஆண்டு ஒருவர் மது குடிக்க வேண்டிய அளவுகளை குறைத்து பிரிட்டன் அரசு பரிந்துரைத்தது. ஆண்களும், பெண்களும் வாரத்திற்கு 14 யூனிட்டுக்கு அதிகமாக குடிக்க கூடாது என்று அது கூறியது. இந்த அளவு ஓரளவு வலிமையுடைய 6 பின்ட்ஸ் பீருக்கும் 7 கிளாஸ் ஒயினுக்கு சமமானதாகும்.

 

ஆனால், எந்த அளவிலான ஆல்கஹாலும் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் என்று அப்போது இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக இருந்த பேராசிரியர் டேமி சாலி டேவிஸ் தெரிவித்திருந்தார்.

 

ஆல்கஹால் ஏற்படுத்தும் உடல் நல பிரச்சனை தொடர்பாக இதுவரை நடத்தப்பட்டிராத மிக முக்கியமான ஆய்வு இதுவென பேராசிரியர் சாசானா கூறியுள்ளார்.

 

"ஆல்கஹால் விற்பனை, குடித்த ஆல்கஹால் அளவு பற்றி சுயமாக அளிக்கப்பட்ட தரவுகள், மது அருந்தாமல் இருத்தல், சுற்றுலா தரவுகள் மற்றும் சட்டபூர்வமற்ற வர்த்தக அளவுகள், அந்தந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆல்கஹால் என அதிக அம்சங்கள் இந்த ஆய்வில் கவனத்தில் எடுத்துகொள்ளப்பட்டுள்ளதால், பிற ஆய்வுகளை விட மேலதிகமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் விளக்கியுள்ளார்.

 

பிரிட்டன் பெண்கள் ஒரு நாளைக்கு 3 முறை மது அருந்துவதாகவும், உலக அளவில் அதிக மது அருந்துவோர் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளதாகவும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

 

அதேபோல ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்திருந்தாலும், பெண்களுக்கு மாறாக பிரிட்டன் ஆண்கள் உலக அளவில் 62வது இடத்தையே 195 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பெற்றிருந்தனர்.

 

ஆண்களிடம் மது அருந்தும் அளவு மிகவும் அதிகமாக இருப்பதே இதற்கு காரணமாகும். ருமேனிய ஆண்கள் ஒரு நாளைக்கு 8 முறை குடிப்பதாக தெரியவந்தது.

 

ஒரு சிறிய கிளாஸ் ஒயின், கேன் அல்லது பீர் பாட்டில் அல்லது ஆல்கஹாலின் ஏதாவது ஒரு வகைக்கு சமமான 10 கிராம் ஆல்கஹாலைதான் ஒரு முறை குடிப்பது என்று வரையறுக்கின்றோம்.

 

பிரிட்டனில் ஒரு யூனிட் என்பது 8 கிராம் ஆல்கஹாலுக்கு சமம்.

 

உலக அளவில் மூன்றில் ஒருவர் மது குடிப்பதாக கருதப்படுகிறது. மது குடிப்பது 15 முதல் 49 வயது வரை இறப்பவர்களில் பத்தில் ஒரு பகுதியினரின் மரணத்தோடு தொடர்புடையாதாக கருதப்படுகிறது.

 

"பாதுகாப்பு அளவுக்கு மேலாகவே பிரிட்டனில் பெரும்பாலானோர் மது அருந்துகின்றனர். இந்த ஆய்வு தெரிவிப்பதைபோல ஆல்கஹாலில் பாதுகாப்பான அளவு என்று எதுவுமில்லை. அரசு தனது கொள்கையை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். நீங்கள் மது அருந்த விரும்பினால், அதனால் வருகின்ற ஆபத்துகளை பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார் பேராசிரியர் சாசானா.

நன்றி:லௌரல் லிவிஸ்/ பிபிசி தமிழ்

0 comments:

Post a Comment