"தமிழர்களின் பண்டைய நான்கு கற்கள்"/பகுதி 02



அரைவைக் கல் / அம்மி

அம்மி என்பது கருங் கற்களினால்  செய்யப் பட்ட, மருந்து அல்லது சமையலில் பயன்படும் பொருட்களை அரைப்பதற்கு உதவக் கூடிய, சமதளமாக அமைந்த ஒரு கருவியாகும். அம்மிக் கல்லில் பொருளை இட்டு அரைக்க உருளை வடிவில், குழவி என்று அழைக்கப்படும், ஒரு கருங்கல் பயன்படுகின்றது. இந்தக் குழவியை இரு கைகளாலும் பற்றி, உருட்டியும் இடித்தும் இழுத்தும் பொருட்கள் அரைக்கப் படும். இது தொல் பழங்காலத்தில் இருந்து பயன் பாட்டில் இருந்து வரும் ஒரு கற் கருவி ஆகும். அம்மியும் குழவியும் பயன்படப் பயன்பட மழுமழுப்பாகி விடும், இதனால், பொருட்கள் சரியாக அரை படாது. எனவே, கல் தச்சர் ஒருவரைக் கொண்டு, உளியால் பொள்ளி நுண்ணிய சிறு சிறு குழிகள் ஆக்குவர் (பொள்ளுதல் = குழி இடுதல்). இதற்கு அம்மி பொளிதல் என்று பெயர். அம்மியையும் குழவியையும் இவ்வாறு பொளிதலால் உராய்வு நன்றாக ஏற்பட்டு, பொருட்கள் நன்றாக அரைபடும்.

 

கவிஞர் வைரமுத்து, தன்னுடைய  கவிதை ஒன்றில்:     

கொத்தமல்லி வறுத்து வச்சு, குறுமிளகாய் ரெண்டு வச்சு,

சீரகமும் சிறுமிளகும், சேத்து வச்சு நீர் தெளிச்சு.

கும்மி அரச்சி, நீ கொழ கொழன்னு வழிக்கயில,

அம்மி மணக்கும், அடுத்த தெரு மணமணக்கும்,”

என்று சொல்லுகிறார். ஆமாம், இந்த வரிகளில் உள்ளது போல அம்மியில் அரைக்கும் போது அதன் வாசம் தனி வாசம் தான் !

 

வேட்டையாடி உணவு சேகரிக்கும் மக்கள் [Hunter-gatherers], விவசாயம் ஆரம்பிப்பதற்கு வெகு காலம் முன்பே, 32,000 ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு வகை பல்லரிசி [ஓட்ஸ் / oats] சாப்பிட்டார்கள் என இன்று அறிய முடிகிறது என இத்தாலியில் உள்ள புளோரென்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மர்தா மரியொட்டி லிப்பியும் அவரது சகாக்களும் [Marta Mariotti Lippi at the University of Florence in Italy and her colleagues] ஆய்வு மூலம் கண்டு பிடித்துள்ளார்கள். தென் இத்தாலியில் அவர்களால் கண்டு எடுக்கப்பட்ட அரைக்கும் கல்லில் மாத்தானியம் [starch grains on an ancient stone grinding tool from southern Italy] கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதில் இருந்து நாம் அறிவது அம்மி போன்ற ஒன்று அல்லது அம்மியின் முன்வடிவம் 32,000 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதே ஆகும்.

 

பொதுவாக அரைக்கும் கல் அல்லது மூல வடிவ அம்மிக்கல் தானியங்கள், கொட்டைகளை அரைத்து மாவாக்குவதுடன் அல்லது சிறு துண்டுகள் ஆக்குவதுடன், விலங்குகளின் எலும்பை உடைத்து எலும்புநல்லி அல்லது எலும்பு மச்சையை (Bone marrow) பிரித்தெடுக்கவும் குருத்தெலும்பு மற்றும் பல்லிகள் போன்ற சின்ன விலங்குகளை பொடியாக்கவும் அல்லது  நொறுக்கவும் [for pulverising cartilage and small animals such as lizards] பாவிக்கப்பட்டு இருக்கலாம் என இன்று அறிய முடிகிறது. உதாரணமாக, பூர்வ எகிப்திய கல்லறைகளிலிருந்து எடுக்கப்பட்ட சிறிய சிலைகள், பண்டைய காலத்தில் தானியத்தை அரைப்பதற்கு அம்மிக்கல் போன்ற ஒன்று பாவிக்கப் பட்டதை எடுத்து காட்டுகிறது. இங்கு இரண்டு கற்கள் இருந்தன; ஒரு சரிவான அடிக் கல்லும், சிறிய மேல் கல்லும் இருந்தன. பொதுவாக ஒரு பணிப்பெண் இந்த அம்மிக்கு முன் மண்டியிட்டு அமர்ந்து மேல் கல்லை இரண்டு கைகளிலும் பிடித்துக் கொள்வாள். கற்களுக்கு இடையே இருக்கும் தானியம் அரைபடும்படி முழு பலத்தையும் பிரயோகித்து மேல் கல்லை அடிக் கல்லின் மீது வைத்து முன்னும் பின்னும் நகர்த்துவாள் என்பதை அந்த சிலை [படம் - 10] எமக்கு சொல்லுகிறது.

 

கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இரண்டாவது நூலாக இடம் பெறும் யாத்திராகமம் / விடுதலைப் பயணம் [Exodus / The Book of Exodus is the second book of the Bible]:11:5 "அப்போது, எகிப்து தேசத்திலுள்ள மூத்த மகன்கள் எல்லாரும் செத்துப் போவார்கள். சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற பார்வோனின் மூத்த மகன் முதல் மாவு அரைக்கிற அடிமைப் பெண்ணின் மூத்த மகன் வரை எல்லாரும் செத்துப்போவார்கள்." என்று கூறுகிறது. இதில் இருந்து நாம் அறிவது பண்டைய  எகிப்தில் முழு நேர மாவு அரைக்க அடிமைப் பெண்களை நியமித்து இருக்கிறார்கள் என்பது ஆகும். அது மட்டும் அல்ல, இவர்கள் மணிக்கணக்காக மண்டியிட்டு அமர்ந்து இருந்து அரைத்தது, கட்டாயம் அவர்களின்  உடலை பாதித்தும் இருக்கும். இதை மெய்ப்பிப்பது போல, பண்டைய சிரியாவில் கண்டு எடுக்கப் பட்ட எலும்புக் கூடுகளை ஆராய்ந்த போது அவை சாதாரண நிலையில் இல்லா திருப்பது தெரிய வந்து உள்ளது. முழங்கால் மூட்டுகளில் விரிசல், முதுகெலும்பின் கடைசியிலுள்ள முள்ளெலும்பில் பாதிப்பு, கால் பெருவிரலில் கடுமையான எலும்பு சார்ந்த மூட்டழற்சி (Arthritis) போன்ற தொடர் அழுத்த பாதிப்புகள் (repetitive stress injuries) அவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு புதைப்படிவ ஆய்வாளர்கள் இன்று வந்துள்ளார்கள்.

 

தென் இந்தியா அல்லது இலங்கை இந்து தமிழர்கள், தம் திருமண விழாக்களில் அம்மி மிதித்தல் என்ற ஒரு நிகழ்வை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாடி வருகிறார்கள். உதாரணமாக கி.பி. 6ஆம் நூற்றாண்டு - 9 ஆம் நூற்றாண்டு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில்:

"செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,

அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்"

என்ற வரி இதை உறுதி படுத்துகிறது. மணப் பெண் மன உறுதிக்காக அம்மியை மிதிக்க வைப்பது என பொதுவாக கூறப் பட்டாலும், அன்றைய கால கட்டத்தில் அம்மியையும் பெண்ணையும் பிரிக்க முடியாமல் இருந்தது உண்மையே. அன்று அம்மியும் குழவியும் இல்லாத வீடே கிடையாது எனலாம், பெண் என்பவள் மனைவியாக, தாயாக வீட்டை , சமையலை கண்காணிப்பதில் முழுநேரம் ஒதுக்கிய காலம் அது. அன்றைய சமையலில் பிரிக்க முடியாத சமையல் உபகரணம் கட்டாயம் அம்மியாகவே இருந்து இருக்கும். அரைத்தல், பொடியாக்குதல், நொறுக்குதல் என பலவகை செயல் பாடுகளுக்கு அது பெண்களுடன் இணைந்தே இருந்திருக்கும். எனவே மணமுடித்து புது குடித்தனம் போகும் மணப்பெண்ணுக்கு  ஒரு சமூக மற்றும் கலாச்சார ரீதியாக இணைக்கப் பட்ட அம்மியை ஞாபக படுத்தும் ஒரு சடங்காகவும் இது இருந்து இருக்கலாம் ?. அதற்கு வலு சேர்க்க, புராண காரணங்கள் சேர்க்கப் பட்டு இருக்கலாம் ? 


தமிழனுடன் அம்மி எவ்வளவு தூரம் அன்று இணைந்து இருந்தது என்பதற்கு நாம் இன்னும் ஒரு உதாரணம் கூறலாம்.

"ஆடிப்பட்டம் தேடிவிதை

ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்"

"அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்"

போன்ற பழமொழிகளையும் கூறலாம்.  இதில் ஒன்று நீங்கள் கவனிக்க வேண்டியது, ஆட்டுக்கல் , உரல் போன்றவை சமயலுடன் இணைந்து இருந்தாலும் அது இங்கு பேசப் படவில்லை என்பதே ஆகும். இது தான் அம்மியின் முக்கியத்தை எடுத்து காட்டுகிறது. அது மட்டும் அல்ல முதல் தோன்றியதும் அம்மியின் மூல முன் வடிவமே [proto grinding-slab or ammikkal] ஆகும் !

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி 03 வாசிக்க அழுத்துங்கள்-Theebam.com: "தமிழர்களின் பண்டையநான்கு கற்கள்"/பகுதி03:

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள்-

Theebam.com: "தமிழர்களின் பண்டைய நான்கு கற்கள்" / பகுதி 01:

➡➡➡➡➡➡➡➡

படம் /  Photo 01 - அம்மியும் குழவியும்

படம் /  Photo 02 - a ] தினை, ஒரு வகை சோளம் மற்றும் மக்காச்சோளம் [millet, sorghum, and maize] போன்றவற்றை அரைக்க பயன் பட்ட  பிரகாசமான படிவுப் பாறையில் அமைந்த அரைக்கும் அடுக்குகள் [அம்மி]  / Gneiss grinding-slab used for processing millet, sorghum, and maize. b ] கை கற்கள் [அம்மிக் குழவி]. இதில் வலது பக்கம் இருப்பது, சோளத்தின் ஆரம்ப [முதல்]  அரைத்தலுக்கான மிகவும் கரடு முரடான கட்டமைப்பை கொண்டது ஆகும். இடது பக்கம் இருப்பது, தினை மற்றும் சோளத்தின் இரண்டாவது அரைத்தலுக்கான மிகவும் அழுத்தமான கட்டமைப்பை கொண்டது ஆகும். / Flat-handstones; tool on the right is more roughly textured, and used for initial grinding of sorghum, tool on the left is more smoothly textured, and used for millet and the second grinding of sorghum. [Found in Africa]

படம் /  Photo 03 -  உணவை அரைப்பதற்குப் பயன்படுத்தப்படும் கற்கள் / Stones used for grinding food

படம் /  Photo 04 -  அரைக்கும் கல் - ஆஸ்திரேலியன் அருங்காட்சியகம் / Grindstones  - Australian Museum

படம் /  Photo 05 -  அரைக்கும் கல்,  க்ரோட்டோ பக்லிக்சி, இத்தாலி. மாத்தானியம் அதன் மேற்பரப்பில்  படிந்து இருந்தது காணப் பட்டது  / A grinding stone from Grotta Paglicci, Italy, and a starch grain that was found embedded in its surface. Sources: Stefano Ricci, Marta Mariotti Lippi / University of Florence

படம் /  Photo 06 -  கி மு 2345 முதல் கிமு 2181 வரை ஆட்சி செய்த எகிப்தின் ஆறாம் வம்ச காலத்தில், வேலைக்காரி ஒருத்தி சோளம் அரைக்கும் சிலை / Servant grinding corn / Sixth Dynasty of Egypt  [ca. 2345 BC–ca. 2181 BC ]

🥌🥌🥌🥌🥌🥌🥌🥌🥌🥌

0 comments:

Post a Comment