அறிவியல்=விஞ்ஞானம்
பேரிடியை இனிதே
வரவேற்கும் மரங்கள்
இடி-மின்னல் தாக்குவது, மரங்களுக்கு உடனடி மரண தண்டனை போன்றது. ஒவ்வொரு ஆண்டும் வெப்பமண்டலப் பகுதிகளில் லட்சக்கணக்கான மரங்கள் இடி விழுந்து சாம்பலாகின்றன.
ஆனால், பனாமாவில் உள்ள சிலவகை மரங்கள், வானிலுள்ள மழை மேகங்களுடன் ஒரு வித்தியாசமான உறவை உருவாக்கியுள்ளன. சிலவகை மரங்கள், இடி, மின்னலை கொலையாளிகளாக அல்லாமல், நட்பு சக்திகளாகப் பயன்படுத்துகின்றன என்கிறது ஒரு புதிய ஆராய்ச்சி.
விஞ்ஞானிகள் அண்மையில் இனங்கண்டுள்ள இந்த புதிய வகை மரங்கள், உயர் இடி கொண்டுவரும் உயர் மின்னழுத்த அதிர்ச்சிகளைத் தாங்கும் வகையில் தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளன. இடிகள் செலுத்தும் மின்சாரத்தை பெற்றுக்கொண்டு, சிறப்பு திசுக்கள் மூலம், பூமிக்கு கடத்திவிடுகின்றன இந்த மரங்கள்.
இன்னும் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இடி தாக்குதல்கள், மரப்பட்டைகளில் பிளவுகளை ஏற்படுத்துகின்றன. இந்தப் பிளவுகள் மரங்கள் வேகமாக திசுக்களை, பட்டைகளை புதுப்பித்துக்கொள்ளத் துாண்டுகின்றன.
மேலும், இடியால் செறிவடைந்த கனிமச்சத்து நிறைந்த நிலத்தடி நீரை மிகவும் திறமையாக உறிஞ்சவும் இந்த மரங்களால் முடிகிறது. அழிவு சக்தியாக கருதப்பட்ட இடியை, இந்த மரங்கள் ஆக்க சக்தியாக பயன்படுத்துவது, பரிணாமத்தின் விந்தையாகவே தாவரவியல் விஞ்ஞானிகள் பார்க்கின்றனர்.
சிவப்பு நிற
வலை
அறிவியல் வரலாற்றில் இதுவரை
மரபணு மாற்ற CRISPR-Cas9 தொழில்நுட்பம், பல விலங்குகள், தாவரங்கள் ஏன் பாக்டீரியா மீது
கூட பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல்முறையாக ஜெர்மனியில் உள்ள பெய்ரூட் பல்கலை, சிலந்திகள்
மீது பயன்படுத்தி உள்ளது. மரபணு மாற்றப்பட்ட சிலந்தி ஒளிர்கின்ற சிவப்பு நிற வலையைப்
பின்னுகிறது. சிலந்திகளின் வலை நுால் பல துறைகளில் பயன்படுகிறது.
மெதில் அடாப்டோஜென்
அமெரிக்காவின் வாஷிங்டன்
பல்கலை மேற்கொண்ட ஆய்வில், நம் உடல் செல்கள் ஆரோக்கியமாக இயங்க, மெதில் அடாப்டோஜென்
எனும் சேர்மம் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது மஞ்சள், பூண்டு, பெர்ரி, ரோஸ்மேரி
கிரீன் டீ ஆகிய உணவுகளில் அதிகமாக உள்ளது.
மின்சாரம்
தரும் மழைத்துளி
சுற்றுச்சூழலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படுத்தாதபடி மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டுவது காலத்தின் கட்டாயம். நீர்மின் திட்டங்கள் இதற்குப் பெரிய அளவில் உதவும். ஆனால், இதற்கென பெரிய அணைகள் கட்டுவது அதிக செலவு வைக்கும்.
அதேபோல, கடல் அலைகளில் இருந்து மின்சாரம் எடுப்பதும் அனைத்து இடங்களுக்கும் பொருந்தும் விஷயமல்ல. எனவே, மழையில் இருந்து மின்சாரம் எடுக்கும் புதுவழி தற்போது பிரபலமாகி வருகிறது.
2 மில்லி மீட்டர்
சிங்கப்பூர் தேசிய பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதில் ஒரு புதிய முறையை வடிவமைத்துள்ளனர். ஆய்வாளர்கள், 32 சென்டிமீட்டர் உயரமும் 2 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட டியூப்பை எடுத்துக் கொண்டனர். இந்த டியூப் மின்சாரத்தைக் கடத்துகின்ற பாலிமரால் ஆனது. இதன் மீது ஓர் உலோக ஊசியைப் பொருத்தினர். ஊசி மீது விழும் மழைத்துளி பல சிறு துளிகளாகப் பிரிந்து குழாய்க்குள்ளே செல்லும். அப்படிச் செல்லும் போது, காற்றுடன் இணைந்து மின்சாரம் உற்பத்தியாகும்.
பாதிப்பு ஏற்படாது
இந்த மின்சாரத்தை வைத்து 12 எல்இடி விளக்குகளை 20 நொடிகளுக்கு எரிய வைக்க முடியும்.
ஆகவே, இது மிக எளிமையான வழி என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற பல டியூப்களை இணைத்து வைத்து ஒரு வீட்டிற்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.
நகரப் பகுதிகளில் வீட்டு மேற்கூரைகளின் மீது மழை பொழியும்போது, இந்த முறையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். இதனால், எந்த வகையிலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது.
உடல் பருமன்
சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முக்கியமான ஒன்று உடல் பருமன். விஞ்ஞானிகள் இதற்கு எளிய தீர்வை உருவாக்க ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தத் திசையில் அமெரிக்க நியூயார்க் பல்கலை ஆய்வாளர்கள் ஒரு முக்கிய ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். நாம் உண்ணும் உணவில் பலவிதமான அமினோ அமிலங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது 'சிஸ்டைன்.'
விஞ்ஞானிகள் 'சிஸ்டைன்' இல்லாத உணவை, தொடர்ந்து எலிகளுக்குக் கொடுத்து வந்தனர். அத்துடன் எலிகளின் உடலில் 'சிஸ்டைன்' உற்பத்தியாகாதபடிக்கு அவற்றை மரபணு மாற்றமும் செய்தார்கள். 7 நாட்களில் எலிகள் உடல் பருமன் 30 சதவீதம் குறைந்தது.
இந்த 'சிஸ்டைன்' முடக்கப்பட்டதால், எலி உடலில் உள்ள செல்களால் மாவுச்சத்தில் இருந்து ஆற்றலைப் பிரித்தெடுக்க முடியவில்லை. இதனால், ஏற்கனவே உடலில் சேர்த்து வைக்கப்பட்டு இருக்கும் கொழுப்பிலிருந்து ஆற்றலைப் பெற்றன. இதனால் எலிகளின் உடலில் கொழுப்பு கரைந்து, எடை குறைந்தது.
மனித உடலில் இந்த சோதனை மேற்கொள்வது எளிதானதல்ல. ஏனென்றால் 'சிஸ்டைன்' நம்முடைய உடல் உறுப்புகளைப் பாதுகாக்கிறது. இதன் அளவைக் குறைப்பது ஆபத்தை விளைவிக்கும். அதேபோல நாம் உண்ணும் எல்லாவிதமான உணவுகளிலும் 'சிஸ்டைன்' இருக்கிறது.
'சிஸ்டைன்' இல்லாத உணவை உருவாக்குவதற்கு செலவு பிடிக்கும், தினமும் உண்பது எளிதல்ல.
மேற்கண்ட சிக்கல்கள் இருந்தாலும், இந்த ஆய்வு உடல் எடையைக் குறைப்பதற்கான சிகிச்சையில் ஒரு புதிய வழியைக் காட்டி இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ரத்தத்தில்
தெரியும் வயது
மனித உடலில், வயோதிகம் ஏற்படுத்தும் மாற்றங்களை தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்தத் தேடலின் ஒரு பகுதியாக, மனித ரத்த ஸ்டெம் செல்கள், முதுமையில் எப்படி மாற்றம் அடைகின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவும், ஒரு புதிய கண்டுபிடிப்பை, பார்சிலோனாவில் உள்ள மரபணு ஒழுங்கு முறை மையம் (CRG) மற்றும் பயோமெடிசின் ஆராய்ச்சி நிறுவனம் (IRB) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்தியுள்ளனர்.
தொடர்ந்து பிரிந்து வளரும் ஸ்டெம்செல்கள், ரசாயன 'பார்கோடு' போல சில தடயங்களை விட்டுச் செல்கின்றன.
இந்த 'பார்கோடு' களை விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்தபோது, ஒரு முக்கியமான உண்மையைக் கண்டறிந்தனர். அதாவது, 50 வயதிற்குப் பிறகு, ரத்த உற்பத்தி சில குறிப்பிட்ட குளோன்களின் (clones) ஆதிக்கத்திற்கு உட்படுகிறது.
இந்த குளோன்களின் பெருக்கம், ரத்தத்தின் பன்முகத்தன்மையைக் கணிசமாகக் குறைத்து, நாள்பட்ட அழற்சி (chronic inflammation) காரணமாக நோய்களுக்கு ஆளாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது. இந்த குளோன் ஆதிக்கம், மனிதர்களிலும் எலிகளிலும் காணப்பட்டது. இதுதான் ரத்தம் முதுமையடைவதன் அடிப்படை அம்சமாக இருக்கக்கூடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
'நேச்சர்' இதழில் வெளியான இந்த ஆய்வு, நோய்களை முன்கூட்டியே கண்டறியவும், செல்களுக்குப் புத்துயிரூட்டும் சிகிச்சை முறைகளை (rejuvenation therapies) உருவாக்கவும் உதவக்கூடும் என்று முதுமைப் பிணியியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். அறிவியலின் இந்த முன்னேற்றம், ஆரோக்கியமான முதுமைக்கான புதிய வழிகளைத் திறக்கக்கூடும்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment