“காணாமல் போனவர்கள்” & "அன்பு செலவானால் ஆதரவு வரவு....!" [கவிதை]



“காணாமல் போனவர்கள்”

கடந்து வந்த பாதையில்,

காலடி சுவடில்லை,

சிரித்த முகங்களும்,

சிதறும் நினைவிலில்லை.

 

பேசிய வார்த்தைகள்,

பறந்தே   இடம்  மாறின,

நெஞ்சில் பதிந்த வரிகள்,

நிசப்தம் தான் பேசின.

 

அணைந்து போன ஒளிகள்,

அடங்கிப் போன கனாக்கள்,

அவசரப் பயணத்தில்,

அழிந்த பழகிய தருணங்கள்.

 

நட்பென நமதாய் நின்ற,

நழுவிய நிழலாய்ப் போனார்,

விழியினை தொட்டுச் சிலர் ,

விண்ணிலே மாய்ந்தார்.

 

இருந்தும் நெஞ்சில் எங்கேனும்,

இமையலே இமைப்பவராய்,

இனிமையாய் மலர்ந்தாலும்,

இறுகிய மௌனமாய்ப் தங்குவார்.

 

மறைவதல்ல பரிதாபம்,

மாற்றமின்றிப் போனதே!

மனதின் ஓர நிலத்தில்,

மழையாக ஓடினதே!

 

வீழ்ந்த பூக்களாயினும்,

வாசமாய் வாழ்கின்றார்,

வெண்மதியில் முகமாக,

விழியில் ஒளியாய்த் தெரிகின்றார்.

 

அழிந்து போன அல்லர்,

அறிவில் ஒளிந்தவர்கள்,

அடையாளம் இல்லை என்றாலும்,

அருவாய் நின்றவர்கள்!

 

நிழலில் நனைந்த நினைவலைகள்

நெஞ்சின் ஓரங்களைத் திருப்பினாலும்...

அந்த முகங்கள், அந்த சிரிப்புகள்

நம் பயணத்தில் நிலைத்த நிழற்படங்கள்!

 

-செ.மனுவேந்தன்

 

 

"அன்பு செலவானால் ஆதரவு வரவு....!"

 


"அன்பு செலவானால் ஆதரவு வரவு

பண்பு திடமானால் மனிதம் உயரும்

துன்பம் தொலைந்தால் இன்பம் மலரும்

தென்பு வந்தால் தோல்வி மடியுமே!"

 

"அன்பு என்பது கடமை அல்ல

அக்கம் பக்கத்தாருக்கு நடிப்பதும் அல்ல

அற்பம் சொற்பம் தேடுவதும் அல்ல

அறிவுடன் உணர்ந்த பாசம் அதுவே!"

 

"பருவம் மலர காதல் நாடும்

படுத்து கிடக்கையில் பரிவு தேடும்

பரிவு பாசம் காதலும் அன்பே

பலபல வடிவில் எல்லாம் ஒன்றே!"

 

நன்றி:[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்] 

0 comments:

Post a Comment